நிலக்கரி மற்றும் எரிவாயு ஏற்றுமதியைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம், அரசாங்கம் தங்களது மனித உரிமைகளை மீறிவருவதாகக் குற்றம் சாட்டி ஆஸ்திரேலியப் பிரஜைகள் குழுவினர் , ஐக்கிய நாடுகள் சபையிடம் (UN) முறையிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டு வரும் கடுமையான காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள், கடல் மட்ட உயர்வு மற்றும் நச்சுப் பாசிப் பெருக்கு (toxic algal blooms) போன்ற தீவிர வானிலை மாற்றங்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அரசாங்கம் புதைபடிவ எரிபொருள் (fossil fuel) நிறுவனங்களுக்கு வழங்கி வரும் ஆதரவே காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக நாடுகள் மீது வழக்குத் தொடரலாம் என்று 2025 ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் (ICJ) வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பிற்குப் பிறகு, சர்வதேச அமைப்பொன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது சட்டரீதியான மனித உரிமை முறைப்பாடு இதுவாகும்.
ஐநா சபை எடுக்கும் எந்தவொரு முடிவும் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தாது என்ற போதிலும், உலகின் மிகப்பெரிய நிலக்கரி மற்றும் எரிவாயு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா இதற்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும்.
இந்தக் குழுவில் உள்ள பத்து உறுப்பினர்களில் ஒருவரான வனவிலங்கு சூழலியலாளரும், தன்னார்வத் தீயணைப்பு வீரருமான டாக்டர் பேரி ட்ரெயில் (Dr Barry Traill) தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
2009 ஆம் ஆண்டு விக்டோரியா மாகாணத்தில் ஏற்பட்ட கொடூரமான 'பிளாக் சாட்டர்டே' (Black Saturday) காட்டுத்தீயின் போது, போதுமான அனுபவம் இருந்தபோதிலும் தனது நண்பர்கள் பலர் உயிரிழந்ததாகக் கூறினார்.
"அந்தச் சம்பவம் என்னை ஆழமாக மாற்றியது. தீ விபத்துகள் மற்றும் உயிர் பிழைத்தல் தொடர்பான பழைய விதிகள் இனிப் பொருந்தாது என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது," என்று ட்ரெயில் கூறினார்.
மேலும் 2019 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட 'பிளாக் சம்மர்' (Black Summer) காட்டுத்தீயின் போது முன்நின்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட அவர், பருவநிலை மாற்றம் என்பது எதிர்காலப் பிரச்சனை அல்ல என்பதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
"இது ஏற்கனவே ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மக்களின் உயிரைப் பறித்து, வாழ்வாதாரங்களையும் சமூகங்களையும் பாதித்து வருகிறது. மக்கள் மோசமான பேரழிவுகளை எதிர்கொள்ளும் போது, நிலக்கரி மற்றும் எரிவாயு நிறுவனங்கள் தொடர்ந்து மாசுபாட்டை அதிகரிக்க அரசாங்கம் அனுமதிப்பது ஒரு மாபெரும் பொறுப்பற்ற தனமாகும்," என்று அவர் சாடினார்.
பார்வைக் குறைபாடு மற்றும் நடமாட்டச் சவால்களுடன் வாழும் பிரெண்டன் டோனோஹூ (Brendon Donohue) என்பவரும் இந்த சட்டப் போராட்டத்தில் இணைந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, தனது அடுக்குமாடி குடியிருப்பின் மின்சாரம் பாதிக்கப்பட்டு, மின்தூக்கி (Lift) மற்றும் வெளியேறும் வழிகள் முடங்கியதால் 10 நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த கொடுமையை அவர் விவரித்தார்.
"பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளை வித்தியாசமாகப் பாதிக்கின்றன. அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பாகக் கடப்பதை இது மிகவும் கடினமாக்குகிறது," என்றார் அவர்.
மற்றொரு புகார்தாரரான மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி (Kimberley) பிராந்தியத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண் பேராசிரியர் ஆன் பொலினா (Prof Anne Poelina) கூறுகையில், கடுமையான வெள்ளம் காரணமாக அந்த மாநிலத்தின் மிக முக்கியமான நீர்நிலைகளில் ஒன்றான ஃபிட்ஸ்ராய் (Fitzroy) நதிப் பகுதியிலிருந்து தாம் இடம்பெயர வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
"நதி ஆரோக்கியமாக இருக்கும்போது எங்கள் மக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்; நதி பாதிக்கப்படும்போது எங்கள் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் எங்களது கலாச்சார அறிவு அழிந்து வருவதுதான் எனக்கு பெரும் கவலையளிக்கிறது. எங்களது அறிவு எழுதப்பட்ட வடிவில் இல்லை, நிலத்தோடு நேரடியாகத் தொடர்பில் இருப்பதன் மூலமே அது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது," என்று அவர் கவலை தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம், உலகளாவிய அதிகார வரம்பைக் கொண்ட உலகின் மிக உயர்ந்த நீதிமன்றமாகக் கருதப்படும் சர்வதேச நீதிமன்றம் (ICJ), புவி வெப்பமடைதலுக்குக் காரணமான வரலாற்று உமிழ்வுகள் (historic emissions) உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களுக்காக நாடுகள் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் வழக்குத் தொடரலாம் எனத் தீர்ப்பளித்திருந்தது.