உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், ஈரானின் ஆதரவு பெற்ற குகுழுவொன்று, ஆஸ்திரேலிய மண்ணில் தீவைப்பு, பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் படுகொலைகளைக் கூட நிகழ்த்தக்கூடும் என்று உளவுத்துறை அமைப்பான ASIO-வின் தலைமை இயக்குநர் மைக் பர்கெஸ் (Mike Burgess) எச்சரித்துள்ளார்.
தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை புதன்கிழமை வெளியிட்ட மைக் பர்கெஸ், ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புச் சூழல் சிதைவடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
Bondi Beach பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பெர்த்தில் நடந்த Invasion Day பேரணியில் முறியடிக்கப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு வெளியிடப்படும் முதல் அறிக்கை இதுவாகும்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டி காரணமாக, ஆஸ்திரேலியாவில் உளவு வேலைகளும் வெளிநாட்டுத் தலையீடுகளும் "தீவிர நிலையை" எட்டியுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தணிந்துள்ள போதிலும், ஆஸ்திரேலியாவைத் தங்களுக்கு எதிரான ஒரு இலக்காகவே ஈரான் இன்னும் பார்க்கிறது.
"ஐரோப்பாவில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஈரானிய ஆதரவுக் குழுக்கள், ஆஸ்திரேலியாவிலும் தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி, படுகொலைகள் மற்றும் தீவைப்பு போன்ற வன்முறைகளைத் தூண்டக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்மையாகவே உள்ளன," என்று பர்கெஸ் எச்சரித்தார்.
ஆஸ்திரேலியாவின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை கவலைக்கிடமாக இருந்தபோதிலும், நாட்டின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை தொடர்ந்து 'PROBABLE' (தாக்குதலுக்கான சாத்தியம் உள்ளது) என்ற மட்டத்திலேயே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமான 'EXPECTED' (தாக்குதலை எதிர்பார்க்கலாம்) என்ற நிலை, ஒரு குறிப்பிட்ட தாக்குதல் குறித்த துல்லியமான உளவுத் தகவல் கிடைக்கும்போது மட்டுமே அறிவிக்கப்படும். தற்போது அத்தகைய குறிப்பிட்ட தகவல் இல்லை என்றாலும், அரசியல் தூண்டுதலால் நடக்கும் வன்முறைகள் 'PROBABLE' என்பதை விடவும் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
மேலும், தற்போது தனிநபர்கள் குழுக்களாக இணையாமல், தனித்தனியாக இணையம் (Online) வழியாகவே தீவிரவாதப் பாதைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.
பெரிய திட்டமிடல்கள் இன்றி, மிகக் குறைந்த ஆயுதங்களைக் கொண்டு திடீர் தாக்குதல்களை அவர்கள் நடத்துவதால், இவர்களைக் கண்காணிப்பது அல்-கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் (ISIL) அமைப்புகளைக் கண்காணிப்பதை விட மிகவும் கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.