ஆஸ்திரேலிய, விக்டோரியா மாநில லிபரல் கட்சி எம்பி-யான Moira Deeming , சக கட்சி எம்பி மேத்யூ Matthew Guy மீது தான் சுமத்திய குற்றச்சாட்டிற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க மறுத்துள்ளதால், அவரது வேட்பாளர் தகுதி பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதன் மூலம் வரவிருக்கும் நவம்பர் மாத தேர்தலில் அவர் போட்டியிடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த மாதம் மெல்போர்னில் உள்ள மாசிடோனிய சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, முன்னாள் கட்சித் தலைவர் மேத்யூ காய் தன்னை ‘ஹெட்லாக்’ (Headlock - கழுத்தைப் பிடித்து நெரிப்பது) செய்து தாக்கியதாக மொய்ரா டீமிங் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து விக்டோரியா காவல்துறையிலும் அவர் முறைப்பாடு செய்தார்.
இருப்பினும், அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் மேத்யூ காய் கூட்ட நெரிசலில் மொய்ராவின் முதுகில் கையை மட்டுமே வைத்தார் என்பதை உறுதி செய்து, புகாரைத் தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, தன் மீது அவதூறு பரப்பியதற்காக மொய்ரா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேத்யூ காய் எச்சரித்தார்.
திங்கட்கிழமை தனது வழக்கறிஞர் மூலம் மொய்ரா டீமிங் வெளியிட்ட அறிக்கையில்,
"ஹெட்லாக் (Headlock) என்ற வார்த்தையின் தொழில்நுட்ப ரீதியான அர்த்தத்தை நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், அன்று எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் (Trauma) அதை அவ்வாறு உணர்ந்து, நல்ல எண்ணத்துடனேயே புகார் அளித்தேன். எனவே, இதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்."
என்று பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார்.
மொய்ரா மன்னிப்பு கேட்க மறுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ஜெஸ் வில்சன் (Jess Wilson) மற்றும் கட்சியின் மாநில நிர்வாகக் குழுவினர் அவர் மீதான வேட்பாளர் தகுதியை ரத்து செய்ய (Revoke preselection) ஆலோசித்து வருகின்றனர்.