சிட்னியில் ஒருவரின் கையைத் துண்டித்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நான்கு சிறார்களை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிறுவர்களை "cheap labour" ஆகப் பயன்படுத்தி, தீவிரமான குற்றங்களைச் செய்ய வைப்பதற்காகக் குற்றக் கும்பல்கள் இணையதளம் வழியாக அவர்களைக் குறிவைத்துத் தங்களது வலையில் வீழ்த்தி வருவதாகப் பெற்றோருக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்தான் இந்தக் கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன.
சமீபத்தில் காவல்துறை வெளியிட்ட கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளின் அடிப்படையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் தென்மேற்கு சிட்னியின் பல பகுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு 16 மற்றும் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜூன் 6-ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில், முகமூடி அணிந்த நான்கு பேர் கைகளில் பெரிய கத்தி மற்றும் கோடாரிகளுடன் கிரீனாக்ரேவில் (Greenacre) உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைவதை அந்த சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
வீட்டிற்குள் நுழைந்த அச்சிறுவர்கள், அங்கிருந்த 23 வயது இளைஞரை மிரட்டிப் பணம் கேட்டுள்ளனர்.
பின்னர் அவரைத் தாக்கியதில், அந்த இளைஞரின் இடது கை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர், அந்த நான்கு பேரும் வீட்டில் இருந்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு பேங்க்ஸியா சாலை (Banksia Road) வழியாக ஒரு கருப்பு நிற எஸ்யூவி (SUV) காரில் தப்பி ஓடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், மருத்துவர்களால் அவரது கையை மீண்டும் பொருத்த முடியவில்லை. தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சீரான நிலையில் உள்ளார்.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கீர்ன்ஸ், ஜார்ஜஸ் ஹால், ஈகிள் வேல், ஓரான் பார்க் மற்றும் கிரிகோரி ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள அச்சிறுவர்களின் வீடுகளில் அதிரடிப் படை மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் மீது கடுமையான அத்துமீறல், கடுமையான குற்றச்செயலில் ஈடுபடுதல் மற்றும் குற்றக் கும்பலில் பங்கேற்றல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு 17 வயது சிறுவன் மீது டிஜிட்டல் சான்றுகளைப் பகிர மறுத்தது, போதைப்பொருள் வைத்திருந்தது மற்றும் உரிமமின்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட கூடுதல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்குப் பிணை ( மறுக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர்கள் பல ஆண்டுகள் சிறையில் கழிக்க நேரிடும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.