ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மத்திய-வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள ஹாக்ஸ் நெஸ்ட் (Hawks Nest) என்ற இடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை Migratory bird ஒன்றிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், பொதுமக்கள் யாரும் இதனால் பீதியடைய வேண்டாம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Migratory bird கடல் பறவைகளிடம் கண்டறியப்படும் இப்பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தனிப்பட்ட ஒரு சில நிகழ்வுகளா அல்லது வைரஸ் பரவலின் ஒரு பகுதியா என்பதை உறுதிப்படுத்த, துல்லியமான கண்காணிப்பும் பரிசோதனைகளும் மிகவும் அவசியமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கடல் பறவைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளிக்கிழமை அன்று பெர்த் நகரின் வடக்கு புறநகர்ப் பகுதியான முல்லாலுவிலும் (Mullaloo) பறவை ஒன்றிற்கு இப்பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று மிக முக்கியமானது என்றாலும், இதனால் பீதியடையத் தேவையில்லை என்று பர்னெட் இன்ஸ்டிடியூட் (Burnet Institute) அறிவியல் இயக்குனர் பேராசிரியர் ஹெய்டி டிரம்மர் (Heidi Drummer) தெரிவித்துள்ளார்.
"பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு தான். பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் மனிதர்களை எளிதில் தாக்குவதில்லை. பாதிக்கப்பட்ட பறவைகள், விலங்குகள் அல்லது அந்தத் தொற்றால் மாசுபட்ட சூழலுடன் மிக நெருங்கிய தொடர்பு ஏற்படும் போது மட்டுமே மனிதர்களுக்கு இந்தத் தொற்று பரவுகிறது" என்று பேராசிரியர் டிரம்மர் விளக்கியுள்ளார்.
மேலும், காட்டுப் பறவைகளிடம் இந்தத் தொற்று கண்டறியப்பட்டதால், இது ஆஸ்திரேலியா முழுவதும் பரவிவிட்டது என்றோ அல்லது வணிக ரீதியிலான கோழிப்பண்ணைகளுக்குள் நுழைந்துவிட்டது என்றோ அர்த்தமல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்முதலாக கடந்த ஜூன் 14 அன்று மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையான எஸ்பெரன்ஸ் (Esperance) பகுதியில் உள்ள ஒரு பறவையிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் வழக்கின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் (La Trobe University) எம்மா கிராண்ட் (Emma Grant) கூறுகையில், இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடியது என்பதால், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் நாட்டுப் பறவை இனங்களுக்கு இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்து கிடக்கும் காட்டுயிர்களைத் தொடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய பறவைகளைக் கண்டால் அவசர உதவி எண்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறும், அந்த இடங்களைப் பதிவு செய்து புகைப்படங்கள் எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேட்டர் ஹெல்த் சர்வீசஸ் (Mater Health Services) தொற்றுநோய் பிரிவு இயக்குனர் பால் கிரிஃபின் (Paul Griffin) கூறுகையில், வலசை போகும் பறவைகள் மூலம் இந்தத் தொற்று பரவுவது தவிர்க்க முடியாதது என்றாலும், ஆஸ்திரேலியா இதனைத் தடுப்பதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றார். தற்போதைய நிலையில் அனைத்துப் பாதிப்புகளும் காட்டுப் பறவைகளிடமே கண்டறியப்பட்டுள்ளன, உள்ளூர் கோழிப்பண்ணைகளுக்குள் இது பரவவில்லை.
இருப்பினும், மற்ற மாநிலங்களிலும் இந்தத் தொற்று கண்டறியப்படுவது "காலத்தின் கட்டாயம்" மட்டுமே என்றும், பண்ணை பறவைகளுக்குள் இது பரவினால் பெரிய அளவில் பறவைகளை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு பெரும் பொருளாதாரப் பாதிப்பை உண்டாக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆயினும், இந்தத் தொற்றைக் கையாள்வதற்கும் பண்ணைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.