பிரபலமான நகைச்சுவை பாணியிலான போட்காஸ்ட் (Podcast) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் , தனது திருமண வாழ்க்கை குறித்து ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நகைச்சுவை கலைஞர் நிக்கி ஆஸ்போர்னின் (Nikki Osborne) 'புஷ் டீப்' (Bush Deep) என்ற நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.
அதில் "ஷாக், மேரி, டேட்" (shag, marry, date - உடலுறவு, திருமணம், டேட்டிங்) என்ற விளையாட்டின் கீழ், பாப் பாடகி கைலி மினோக் (Kylie Minogue), நடிகர் நிகோல் கிட்மேன் (Nicole Kidman) மற்றும் கலைஞர் ரோண்டா பர்ச்மோர் (Rhonda Burchmore) ஆகியோரில் யாரைத் தேர்ந்தெடுப்பார் என்று கேட்கப்பட்டது.
தமக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது என்பதைச் சுட்டிக்காட்டி அல்பானிஸ் முதலில் பதிலளிக்க மறுத்தார்.
ஆனால், ஒருவேளை உங்களது திருமணம் முறிந்தால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று தொகுப்பாளர் மீண்டும் அழுத்தம் கொடுத்துக் கேட்டபோது, அல்பானிஸ், "ஓ, கைலி தான், அதில் சந்தேகமே இல்லை," என்று பதிலளித்தார்.
அவரை திருமணம் செய்வீர்களா, அவருடன் உடலுறவு கொள்வீர்களா அல்லது டேட்டிங் செல்வீர்களா என்று அவரிடம் மீண்டும் கேட்கப்பட்டதற்கு, அல்பானிஸ்: "மேலே சொன்ன அனைத்தும் தான். அவர் ஒரு சிறந்த பெண்," என்று கூறினார்.
சர்ச்சையைக் கிளப்பிய மற்றுமொரு கருத்து
நேர்காணலின் மற்றொரு பகுதியில், அல்பானிஸும் அவரது மனைவி ஜோடி ஹெய்டனும் (Jodie Haydon) "இன்னமும் முயல்களைப் போல உடலுறவில் ஈடுபடுகிறார்களா?" என்று ஆஸ்போர்ன் கேட்டார்.
அதற்கு பிரதமர், "கால்பந்து போட்டிக்கு பிறகு" என்று பதிலளித்ததுடன், சவுத் சிட்னி ராபிட்டோஸ் (South Sydney Rabbitohs) அணியின் வெற்றி "எப்போதும் ஒரு சிறந்த பாலுணர்வைத் தூண்டும் மருந்தாக (aphrodisiac) இருக்கும்" என்றும் சேர்த்துக் கூறினார்.
இந்த நேர்காணலின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவர் இத்தகைய கருத்துக்களைக் கூறுவது முறையற்றது என்று சிலர் விமர்சித்துள்ளனர்.
அதே நேரத்தில், இது ஒரு நகைச்சுவை போட்காஸ்ட் நிகழ்ச்சி என்பதால் அதன் பாணிக்கு ஏற்பவே அவர் சாதாரணமாகப் பேசினார் என்று மற்றவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெண்கள் நலத்துறை அமைச்சர் கேட்டி காலகர் (Katy Gallagher) மற்றும் ஒன் நேஷன் கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் (Pauline Hanson) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இது குறித்துப் பேசும்போது, பிரதமரின் கருத்துக்கள் பொருத்தமானவையா இல்லையா என்று கூற மறுத்துவிட்டனர்.
இருப்பினும், சுயேச்சை எம்பி டாய் லே (Dai Le) பிரதமரின் இந்த நடத்தை ஒரு கண்ணியவானுக்கு அழகல்ல என்று விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படாத சில வார்த்தைகளைப் பிரதமர் பயன்படுத்தியுள்ளார் என்று கூறிய அவர், அல்பானிஸ் இத்தகைய மொழியை விரும்பும் ஒரு குறிப்பிட்ட இலக்கு பார்வையாளர்களைக் (target audience) கவர முயன்றிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை அன்று பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில், அல்பானிஸ்: "இந்தக் கருத்துக்களுக்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.