குரங்கம்மை நோய் ஆப்பிரிக்காவைக் கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பதால் அதனை சர்வதேச சுகாதார அமைப்பு, அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆபிரிக்காவில் பரவும் இந்நோய் குறித்து ஆஸ்திரேலிய சுகாதார தரப்புகள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன.
ஆபிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.
500 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் 13 நாடுகளில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்து உள்ளன.
“ இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது.” – என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.
அதேவேளை, குறித்த நோய் தொடர்பில் சர்வதேச போக்கு தொடர்பில் ஆஸ்திரேலியா அவதானித்து வருகின்றது எனவும், இந்நோய் ஆஸ்திரேலியாவுக்குள் பரவாமல் இருப்பதற்குரிய ஏற்பாடுகள் பற்றி ஆராயப்படுகின்றது எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.