பிரதமர் Anthony Albanese மற்றும் அவரது எதிர்கால வாழ்க்கை துணை Jodie Haydon ஆகியோர் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் மத்திய கடற்கரை பகுதியில் 4.3. மில்லியன் டொலர்கள் செலவில் சொகுசு வீடு வாங்கியுள்ள விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இருவரும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர், அதன்பின்னர் இந்த வீட்டிலேயே தமது புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வீட்டுப் பிரச்சினை மற்றும் வீட்டு வாடகை பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், தனது ஓய்வு காலத்துக்காக பெரும் செலவில் பிரதமர் இவ்வாறு வீடு வாங்கியுள்ளமை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், தனது செயலை பிரதமர் நியாயப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பான திட்டத்துக்கு கூட்டணியினரும், கிறீன்ஸ் கட்சியினரும் எதற்காக எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், வீடு வாங்குவதற்காக அரச நிதி பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வீடு வாங்குவது அவரது தனிப்பட்ட விடயம், இதனுடன் அரசுக்கு தொடர்பில்லை என்று வீட்டு வசதிகள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டாட்சி தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தோற்றால் பிரதமர் வீடு செல்ல நேரிடும். எனவே, தனது ஓய்வு காலத்தை இன்பமாக போக்குவதற்காகவே இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரதமர் வீடு வாங்கியுள்ளார் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.
வாழ்க்கைச் செலவு பிரச்சினையில் மக்கள் பரிதவிக்கும் நிலையில், அரசியலுக்கு பின்னரான வாழ்க்கைக்கு பிரதமர் தயாராகிவருகின்றார் என எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.