ஆஸ்திரேலியாவில் புகைபிடித்தல் மற்றும் வேப்பிங் (vaping) பழக்கம் குறைந்துள்ள போதிலும், சட்டவிரோத புகையிலை பயன்பாட்டின் கடுமையான அதிகரிப்பு உட்பட புதிய நிகோடின் பழக்கங்கள் உருவாகியுள்ளன.
ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலன்புரி நிறுவனத்தால் (AIHW) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட, தேசிய போதைப்பொருள் National Drug Strategy Household Survey கண்டுபிடிப்புகளின்படி இது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியர்களின் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை பல தசாப்தங்களாகக் கண்காணித்து வரும் இந்த 2025 ஆய்வில், 14 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 17,500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு, பதிலளித்தவர்களில் 5.6 சதவீதம் பேர் தினமும் புகைபிடித்துள்ளனர், இது முந்தைய 2022-23 ஆய்வில் 8.3 சதவீதமாகவும், 2001 இல் 19.5 சதவீதமாகவும் இருந்த நிலையில் இருந்து குறைந்துள்ளது.
இதற்கிடையில், வேப்ஸ் அல்லது இ-சிகரெட்டுகளின் (e-cigarettes) தினசரி பயன்பாடு முந்தைய வாக்கெடுப்பில் 3.5 சதவீதமாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 3.6 சதவீதமாக நிலையானதாக இருந்தது. இது 2019 இல் 1.1 சதவீதமாக இருந்ததில் இருந்து ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.
இந்த நிலைத்தன்மை "மிகவும் ஆச்சரியமளித்த விஷயங்களில் ஒன்றாகும்" என்று AIHW செய்தித் தொடர்பாளர் லூயிஸ் கேட்ஸ் தெரிவித்தார்.
இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் மக்களின் ஒட்டுமொத்த விகிதத்தில் வீழ்ச்சியைக் கண்டது நிபுணர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.
இளைஞர்களிடையே தினசரி பயன்பாடு 2022-23 இல் 9.3 சதவீதத்திலிருந்து 2025 இல் 8.3 சதவீதமாகக் குறைந்தது.
குறைந்த அளவு அடிக்கடி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 11.3 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்தது.
ஆனால் புகைபிடிப்பவர்களிடையே சட்டவிரோத புகையிலையின் பயன்பாடு 16.7 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக இரு மடங்குக்கும் மேலாக கடுமையாக உயர்ந்துள்ளது .
மேலும் ஒரே நேரத்தில் பல வேறுபட்ட நிகோடின் தயாரிப்புகளை அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆதாரங்கள் உணர்த்துகின்றன.
ஆய்வு செய்யப்பட்ட புகைபிடிப்பவர்களில், கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் கடந்த மூன்று மாதங்களில் எளிய பேக்கேஜிங் (plain packaging) அல்லது சுகாதார எச்சரிக்கைகள் இல்லாத பிராண்டட் புகையிலையை வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆறில் ஒருவர் பிளாஸ்டிக் பைகளில் தளர்வாக விற்கப்படும் புகையிலை அல்லது சிகரெட்டுகள் போன்ற பிராண்ட் இல்லாத சட்டவிரோத புகையிலையைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் (ABS) படி, கடந்த தசாப்தத்தில் சட்டப்பூர்வ புகையிலை தயாரிப்புகளின் விலைகள் கிட்டத்தட்ட மும்மடங்காக அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் சட்டவிரோத புகையிலை தயாரிப்புகளின் மதிப்பிடப்பட்ட விலைகள் பெரும்பாலும் மாறாமல் நிலையாகவே உள்ளன.