அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் (Las Vegas) விமான நிலையத்தில், விசா காலம் முடிந்து தங்கியிருந்ததாகக் கூறி ஆஸ்திரேலியப் பிரஜை ஒருவர் வலுக்கட்டாயமாகக் கீழே தள்ளப்பட்டு, கைவிலங்கிடப்பட்டபோது அவர் அலறிய அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
'லாஸ் வேகாஸ் லோக்கலி' (Las Vegas Locally) என்ற உள்ளூர் செய்தி இணையதளம் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
அதில், சாதாரண உடையில் (Plain clothes) இருந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும், குழப்பமடைந்த நிலையில் இருந்த அந்த ஆஸ்திரேலியப் பிரஜையைக் கீழே தள்ளி அமுக்கிப் பிடித்திருப்பது பதிவாகியுள்ளது.
திங்கட்கிழமை எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த ஆண் ஹூடி (Hoodie) உடையும் தொப்பியும் அணிந்திருந்தார், பெண் முகக்கவசம் அணிந்திருந்தார்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), கைது செய்யப்பட்ட நபர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Phu Nguyen என்றும், அவர் விசா காலம் முடிந்த பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும் NBC செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது.
"அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்று நுயென் அந்த வீடியோவில் பயத்துடன் கத்துவது கேட்கிறது.
அங்கிருந்த பாதுகாப்புப் படை சீருடை அணிந்த ஒருவர், பொதுமக்கள் அருகில் வராமல் தடுத்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர், கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த இரு அதிகாரிகளும், நுயெனின் ஒரு கையில் மட்டும் கைவிலங்கு இடப்பட்ட நிலையில் அவரைத் தரையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து நடந்து சென்றனர்.
ICE அதிகாரிகள் எனப் பொலிஸ் விளக்கம்
ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் (Harry Reid International Airport) இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் என்று லாஸ் வேகாஸ் பொலிஸ் NBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் பொலிஸ் அந்த நபரின் விபரங்களைச் சரிபார்த்தபோது, "அவருக்கு எதிராக எந்தவொரு பிடியாணை உத்தரவும் (Warrants) நிலுவையில் இல்லை" என்று தெரியவந்தது.
இதனால், "அவர்கள் அவரது கையில் இருந்த விலங்கை அகற்றிவிட்டு, இது குறித்து ICE அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்" என்று லாஸ் வேகாஸ்பொலிஸ் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், நுயென் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பின்னர் கைது செய்யப்பட்டார் என்றும், தற்போது அவர் கலிபோர்னியாவில் உள்ள அடெலாண்டோ ICE தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் NBC தெரிவித்துள்ளது.
அவரது விசா கடந்த 2015 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தூதரக விசாரணை மற்றும் அரசியல் சர்ச்சை
அமெரிக்காவில் ஆஸ்திரேலியப் பிரஜை ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, தாங்கள் இது குறித்து அவசர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நெவாடா மாநில செனட்டர் ஜேக்கி ரோசன் (Jacky Rosen) இந்த வீடியோவைப் பகிர்ந்து, இந்த அராஜக நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டுள்ளார்.