இலங்கை, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
'தமிழீழ ஆதரவு இயக்கம்' சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் நீதிப் போராட்டத்திற்கு ஆதரவுக் குரல் எழுப்பினர்.
இப்போராட்டத்தின்போது முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் வருமாறு ,
செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 426-க்கும் மேற்பட்ட உடல்களின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற படுகொலைகளின் சாட்சியமாக இருக்கும் இந்தப் புதைகுழி குறித்துத் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்கு இவை அசைக்க முடியாத ஆதாரங்களாக அமைந்திருந்தபோதிலும், இலங்கை அரசு இதனைத் தொடர்ந்து மறுத்தே வருகிறது.
நீதி மறுக்கப்படும் விரக்தி
பல ஆண்டுகளாகத் தங்களின் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மைக்காகவும் நீதித்திற்காகவும் போராடி வரும் தமிழ் மக்கள், தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள கோபத்தையும் விரக்தியையும் கூட்டத்தில் பேசிய பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்
உலகிலேயே பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகத் திகழ்கிறது.
2009 வரை நடைபெற்ற 26 ஆண்டுகாலப் போரில் 1,00,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகப் போரின் இறுதி நாட்களில் மட்டும் 1,70,000 தமிழர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதாகத் தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
சர்வதேச நாடுகளின் இரட்டை நிலைப்பாடு
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு பயன்படுத்திய அதே இனப்படுகொலை உத்திகளையே, தற்போது பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பது போல, இலங்கை அரசின் இனப்படுகொலைக்கும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச அரசுகள் உடந்தையாகச் செயல்பட்டு வருகின்றன என்று கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச ஆதரவும் கோரிக்கைகளும்
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் (First Nations), பாலஸ்தீனம், தெற்கு சூடான், கனாகி, மேற்கு பாப்புவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இனப்படுகொலையாலும் அடக்குமுறையினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவும் ஒருமைப்பாடும் வலுவாகப் பதிவு செய்யப்பட்டன.
முக்கியக் கோரிக்கைகள்
செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்த உண்மைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வர வேண்டும்.
தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் குறித்துச் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்குக் காரணமானவர்களைச் சர்வதேசச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.
செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி அடுத்தகட்டப் போராட்டமாக ஆகஸ்ட் 30 அன்று மீண்டும் ஒரு மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.