டார்வின் நகரில் புதிய வைத்தியசாலை அமைப்பதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese நிராகரித்துள்ளார்.
அதேவேளையில், ராயல் டார்வின் வைத்தியசாலையின் (RDH) மகப்பேறு சேவைகளை மேம்படுத்துவதற்காக 10 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய பினா சுறாவளி (Cyclone Fina) காரணமாக, ராயல் டார்வின் வைத்தியசாலை யின் செங்கற்கள் பெயர்ந்து கூரையின் மீது விழுந்ததில் அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதன் காரணமாக, டார்வின் நகருக்கு ஒரு புதிய மருத்துவமனை அவசியம் என Northern Territory சுகாதாரத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
மருத்துவமனையின் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ் ஹோஸ்கிங், "வடமாநிலத்தின் மிகப்பெரிய இந்த மருத்துவமனை முற்றிலும் சிதைவடையும் நிலையில் உள்ளது; இன்னும் 10 ஆண்டுகளில் இங்குப் புயல் காலத்தில் தங்குவது பாதுகாப்பானதாக இருக்காது" எனக் கவலை தெரிவித்திருந்தார்.
திங்கள்கிழமை காலை ராயல் டார்வின் மருத்துவமனைக்கு வருகை தந்த பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், மகப்பேறு சேவைகளை மேம்படுத்துவதற்கான இந்த 10 மில்லியன் டாலர் புதிய நிதியை அறிவித்தார்.
டார்வினில் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் இரண்டு முறை கேள்வி எழுப்பியபோதிலும், "நான் இங்கு மகப்பேறு சேவைகளுக்கான $10 மில்லியன் நிதியை அறிவிக்கவே வந்துள்ளேன்" என்று கூறி பிரதமர் அல்பானீஸ் அந்தக் கோரிக்கையை நயம்பட மறுத்துவிட்டார்.
இந்தத் தொகையானது வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள அரையாண்டு பொருளாதார மற்றும் நிதி அறிக்கையில் (Mid-year economic and fiscal outlook) ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.