சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வழக்கறிஞரான கரீம் கான், நீதிமன்றத்தில் பணியாற்றிய இளநிலை பெண் வழக்கறிஞர் ஒருவருடன் பொருத்தமற்ற வகையில் பாலியல் உறவு வைத்திருந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பில் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தின் நிர்வாகக் குழுவின் தூதர்கள் கடந்த மாதம் பரிந்துரை முன்வைத்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 125 உறுப்பு நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அந்தப் பரிந்துரைக்கு
வெள்ளிக்கிழமையன்று ஆதரவாக வாக்களித்தன.
“வழக்கறிஞருமான கரீம் கான் தீவிர நடத்தை மீறல் மற்றும் கடமை தவறிய செயல்களில் ஈடுபட்டதால், அவரைப் பதவியிலிருந்து நீக்க 82 உறுப்பு நாடுகள் பெரும்பான்மையுடன் தீர்மானித்துள்ளன” என்று நீதிமன்ற நிர்வாகக் குழுவின் தலைவர் பைவி கௌகொரந்தா (Paivi Kaukoranta) தெரிவித்தார்.
56 வயதான கரீம் கான் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
வாக்கெடுப்பிற்குப் பிறகு கரீம் கானின் வழக்கறிஞர் தாயப் அலி கூறுகையில், ” கான் இந்த முடிவின் சட்டப்பூர்வ தன்மையையும் நியாயத்தையும் அனைத்து சட்ட வழிகள் மூலமாகவும் எதிர்த்துப் போராடுவார்” என்றார்.