நியூ சவுத் வேல்ஸ் (NSW) ஹண்டர் பகுதியில், திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரொன்று விபத்துக்குள்ளானதில் 13 வயது சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லேக் மேக்வாரி பகுதியிலுள்ள கேட்ஸ்ஹெட் என்ற இடத்தில் அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்ததாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட பொலிஸார், கட்டுப்பாட்டை இழந்த எஸ்.யு.வி (SUV) ரக கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த திறந்தவெளிப் நிலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதைக் கண்டறிந்தனர்.
முதலாவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் 13 வயது சிறுவனுக்கு முதலுதவி அளித்து அவனைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
காரின் உள்ளே இருந்த 14 வயது சிறுவன் காலில் காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டான்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே காரில் இருந்த மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், 18 வயது இளைஞர் ஒருவரும் மற்றுமொரு 14 வயது சிறுவனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது ஜோன் ஹண்டர் மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடம் குற்றவியல் பகுதியாக அறிவிக்கப்பட்டு, விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட விசாரணையில், அந்த கார் சுவாான்சீ (Swansea) பகுதியில் இரவோடு இரவாகத் திருடப்பட்ட ஒன்று என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக ஏதேனும் சாட்சிகள் இருந்தால் உடனே முன்வந்து தகவல் அளிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், மரண பரிசோதகரின் அறிக்கைக்காக தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.