சிட்னியின் பிரதான பொழுதுபோக்கு பகுதியில், போலியான துப்பாக்கியை ஏந்திச் சென்று மக்களிடையே பெரும் பீதியையும் அப்பகுதி முடக்கத்தையும் (Lockdown) ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் மூர் பார்க் பொழுதுபோக்கு பகுதியில் (Moore Park Entertainment Quarter), அமெரிக்கக் கொடி பொறிக்கப்பட்ட குண்டுதுளைக்காத உடையும், நெஞ்சில் துப்பாக்கி போன்ற அமைப்பும் நாடாவால் (tape) ஒட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உணவகங்களுக்குள் நுழைந்தும் வெளியேறியும் உலா வந்துள்ளார்.
இதனைக் கண்ட பல சாட்சிகள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தந்திரோபாய செயல்பாட்டுப் பிரிவு (Tactical Operations Unit) உட்படப் பல டஜன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டனர்.
மாலை 4:45 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
'ஒபோர்ட்டோ' (Oporto) உணவகத்திற்கு வெளியே அந்த நபரைச் வளைத்துப் பிடித்த அதிகாரிகள், அவருடன் இருந்த மற்றொரு நபரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மாலை 5:00 மணியளவில், "இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இப்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாலை 7:00 மணிக்குச் சற்று முன்பாக, 39 மற்றும் 35 வயதுடைய அந்த இரு நபர்களையும் கைது செய்த பொலிஸார், அவர்களிடமிருந்த போலித் துப்பாக்கி, குண்டுதுளைக்காத உடை, பிளாஸ்டிக் விலங்குகள் மற்றும் ஓர் அடையாள அட்டையைக் கைப்பற்றினர்.
பொலிஸாரால் வெளியிடப்பட்ட புகைப்படத்தில், ஒரு ஜோடி கருப்பு பூட்ஸ் காலணிகள் மற்றும் சிரிப்பு முகங்கள் (Smiley faces) மற்றும் நட்சத்திரங்கள் வரையப்பட்டு "கடுமையான போதைப்பொருட்கள்" (hard drugs) என எழுதப்பட்ட ஒரு அட்டைப் பெட்டியும் காணப்பட்டது.
விசாரணைக்காக இருவர்களும் சூரி ஹில்ஸ் (Surry Hills) பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் 35 வயதுடைய நபர் மீது ஆயுதக் குற்றம் மற்றும் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
39 வயதுடைய மற்றொரு நபர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ஆகஸ்ட் 20-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.