மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு குயின்ஸ்லாந்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் உயிரிழந்த டவுன் சிண்ட்ரோம் (Down syndrome) பாதிப்புடைய நபரின் மரணம் தொடர்பாக 70 வயது பெண் ஒருவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'ஐசக் ஆர்' (Isaac Oar) என்பவர் உயிரிழந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், பாரஸ்ட் லேக் (Forest Lake) பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்ணை செவ்வாய்க்கிழமை கைது செய்து கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்தனர்.
வடக்கு குயின்ஸ்லாந்தின் கிராமப்புறப் பகுதியான ஏயர் (Ayr) நகரில் உள்ள அலிஸ் தெருவில் உள்ள ஒரு வீட்டில் 56 வயதான 'ஐசக் ஆர்' (ஐக் என்றும் அழைக்கப்படுபவர்) உணர்வற்ற நிலையில் கிடப்பதாக ஆகஸ்ட் 10, 2023 அன்று அவசரக்கட்டுப்பாட்டுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். சம்பவ இடத்தின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் இது ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
பேசும் திறனற்றவரும், டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவருமான ஐக்கின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு அளிக்கப்பட்ட பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் உடல்நலம் குறித்து குயின்ஸ்லாந்து காவல்துறையினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
தடயவியல் பரிசோதனைகள் மற்றும் தீவிர விசாரணையில், அவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததும், உயிரிழந்த போது அவருடைய உடல் எடை வெறும் 29 கிலோ மட்டுமே இருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதுகுறித்து பேசிய துப்பறியும் ஆய்வாளர் ஜேசன் ஷெப்பர்ட் (Jason Shepherd), விசாரணை முழுமையாக முடியும் வரை காவல்துறை ஓய்வெடுக்காது என்று கூறியிருந்தார்.
"ஐசக் ஆரின் குடும்பப் பின்னணி, அவரது உடல்நலம் மற்றும் அவரது மரணத்திற்கு முந்தைய வாரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்பட்ட பராமரிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்துவோம்," என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், "ஐசக் அல்லது அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரேனும் இருந்தால் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு சிறிய தகவலாக இருந்தாலும் அது எங்கள் விசாரணைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 70 வயது பெண் இன்று பிரிஸ்பேன் நீதிவான் நீதிமன்றத்தில் (Brisbane Magistrates Court) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.