நாசி (Nazi) குறியீடுகள் பொறிக்கப்பட்ட கைவிரல் இரும்பு ஆயுதங்கள் (Brass knuckles) உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்ததாகவும், பகிரங்கமாக நாசி வணக்கம் (Nazi salute) வைத்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமையலறைப் பாத்திரங்கள் எனக் குறிப்பிடப்பட்டு வந்த பார்சல் ஒன்றை சோதனையிட்ட ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் (Border Force), அதில் நாசி குறியீடுகள் பொறிக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதைக் கண்டறிந்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாருக்கு (AFP) தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சென் மேரிஸ் (St Marys) பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில், ஸ்வஸ்திகா குறியீடுகள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள், தொப்பிகள் உள்ளிட்ட பல்வேறு வலதுசாரி தீவிரவாதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அருங்காட்சியகம் ஒன்றில் அவர் நாசி வணக்கம் வைப்பது போன்ற புகைப்படம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு, நேற்று (ஆகஸ்ட் 4, 2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சுவரொட்டியில், "நமது மக்களின் வாழ்வையும், வெள்ளையினக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் நாம் பாதுகாத்தே தீர வேண்டும்" என்ற வாசகத்துடன் எஸ்.எஸ் (Schutzstaffel) அமைப்பின் குறியீடும் இடம்பெற்றிருந்தது.
நாசி குறியீடு பொறிக்கப்பட்ட இரும்பு ஆயுதம் மற்றும் கத்தியை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை, பகிரங்கமாக நாசி வணக்கம் வைத்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர், செப்டம்பர் 3-ஆம் திகதி பென்ரித் உள்ளூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகவுள்ளார்.
முன்னதாக, கலைக்கப்பட்ட 'தேசிய சோசலிச நெட்வொர்க்' அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் 'வைட் ஆஸ்திரேலியா' (White Australia) என்ற பெயரில் புதிய நவாசி (Neo-Nazi) குழுவாக இயங்கி வந்ததையடுத்து, அக்குழுவிற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.