ஆஸ்திரேலிய அரசாங்கம் (Ministerial Direction 119) எனும் புதிய உத்தரவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், திறமையான பணியாளர்களுக்கான விசா (Skilled Visa) விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் புதிய முன்னுரிமை வரிசை முறைமை கடந்த ஜூலை 25 முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய நடைமுறையின் கீழ், ஆஸ்திரேலியாவிற்குள்ளும் (Onshore) வெளிநாடுகளிலும் (Offshore) உள்ள பாதுகாப்புத் துறை (Defence) மற்றும் சட்ட அமுலாக்கத் துறை (Law Enforcement) சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, கட்டுமானம், சுகாதாரம் மற்றும் கற்பித்தல் ஆகிய முக்கிய துறைகளில் பணிபுரியும் உள்நாட்டு விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
புதிய விசா முன்னுரிமை வரிசை
ஜூலை 25 முதல், திறன் பரிந்துரை (Nomination) மற்றும் விசா விண்ணப்பங்கள் பின்வரும் 5 படிநிலைகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்:
முதல் முன்னுரிமை: ஆஸ்திரேலியாவில் இருந்தவாறு (Onshore) அந்நாட்டின் சட்ட அமுலாக்கம் அல்லது பாதுகாப்புத் துறைக்கு ஆதரவளிக்கும் விண்ணப்பங்கள்.
இரண்டாம் முன்னுரிமை: வெளிநாட்டில் இருந்து (Offshore) ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கத் துறைக்கு ஆதரவளிக்கும் விண்ணப்பங்கள்.
மூன்றாம் முன்னுரிமை: ஆஸ்திரேலியாவில் இருக்கும் கட்டுமானம், சுகாதாரம் மற்றும் ஆசிரியர் துறை சார்ந்த விண்ணப்பங்கள்.
நான்காம் முன்னுரிமை: ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஏனைய அனைத்துத் துறை சார்ந்த விண்ணப்பங்கள்.
ஐந்தாம் (இறுதி) முன்னுரிமை: வெளிநாட்டில் இருக்கும் ஏனைய அனைத்துத் துறை சார்ந்த விண்ணப்பங்கள்.
புதிய நிதியாண்டிற்கான புலம்பெயர்வுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,85,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 70 சதவீத இடங்கள் திறமையான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு விண்ணப்பதாரர்களுக்கு முக்கியத்துவம்
நிரந்தரக் குடியுரிமை (PR) வழங்கும் திட்டத்தில், ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. அதன்படி, 1,29,590 இடங்கள் உள்நாட்டில் உள்ளவர்களுக்காகவும், மீதமுள்ள 55,110 இடங்கள் வெளிநாடுகளில் உள்ள உயர் திறமை கொண்ட பணியாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு, "உள்நாட்டினரை மையமாகக் கொண்ட இந்தத் திட்டம், ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து, பணிபுரிந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்து வரும் புலம்பெயர்ந்தோர் விரைவாக நிரந்தரக் குடியுரிமை பெற வழிவகுக்கும்" எனத் தெரிவித்துள்ளது.