கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நூற்றாண்டில் அந்நாட்டைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவென அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காலி (Cali), பெரைரா (Pereira), கிப்டோ (Quibdo) மற்றும் மேனிசேல்ஸ் (Manizales) உள்ளிட்ட மேற்கு கொலம்பிய நகரங்களை கடுமையாகப் பாதித்ததோடு, அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் உணரப்பட்டது.
தலைநகர் போகொடாவில் இருந்து மேற்கே சுமார் 400 கி.மீ (250 மைல்) தொலைவில் உள்ள சொக்கோ (Choco) பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதியில், 107 கி.மீ (66 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே குறைந்தது 21 தொடர் அதிர்வுகள் (aftershocks) பதிவாகின.
கொலம்பியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான Cali யில், இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினரும் தன்னார்வலர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நகரத்தில் குறைந்தது 20 கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், 380 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Cali நகரைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநரான ஜார்ஜ் மொன்காயோ (64) என்பவர் கூறுகையில், கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது நகரம் முழுவதும் தூசிப் படலம் சூழ்ந்ததைக் கண்டதாகத் தெரிவித்தார்.
இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஜுவான் கர்லோஸ் ஒசோரியோ என்பவர், கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது "வெடிகுண்டு வெடித்தது போல்" இருந்ததாகத் தெரிவித்தார்.
"நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனித சங்கிலி அமைத்து உதவி வருகிறோம். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், கனரக இயந்திரங்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன" என்றும் அவர் கூறினார்.
தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்திய அதிபர் டி லா எஸ்ப்ரிலா, "மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவவும், நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்க்கவும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்பதே முதன்மை முன்னுரிமை" எனத் தெரிவித்தார்.
முதற்கட்ட அறிக்கைகளின்படி 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 87 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் (Pacific Ring of Fire) அமைந்துள்ள கொலம்பியாவில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் சாதாரணம் என்றாலும், 6.0 ரிக்டருக்கு அதிகமான நிலநடுக்கங்கள் அரிதானவை. இதற்கு முன் 1999-ஆம் ஆண்டு அர்மீனியா நகருக்கு அருகே ஏற்பட்ட 6.2 ரிக்டர் நிலநடுக்கத்தில் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.