சிட்னியின் Inner West பகுதியில் இரண்டு கத்திகளுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவர் மீது மின்சார அதிர்ச்சி தரும் 'டேசர்' (Taser) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, அவர் உட்பட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பர்வுட் (Burwood) பகுதியில் உள்ள பெல்மோர் வீதியில் அமைந்துள்ள கடைகளுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் நடமாடுவதாக திங்கள்கிழமை மாலை 4.15 மணியளவில் கிடைத்த தகவலையடுத்துத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமான இருவரிடம் பேச முயன்றபோது, அவர்கள் காவல்துறையினரைக் கண்டு தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதன்போது, இரண்டு கத்திகளுடன் தப்பியோட முயன்ற 43 வயதுடைய நபர் மீது காவல்துறையினர் டேசர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.
சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியில், காவல் அதிகாரி ஒருவர் அந்த நபரை எச்சரித்து கத்துவது கேட்கிறது. "கத்தியைக் கீழே போடு. கத்தியைக் கீழே போடு... கீழே போடு, கீழே போடு" என்று அவர் சத்தமிடுகிறார்.
காயமடைந்த அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டு பர்வுட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்த மேலதிக விசாரணைகளைத் காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.