ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு (Gig Workers) தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகமான மணிநேர ஊதியம் மற்றும் விபத்துக் காப்பீடு வழங்குவதை உறுதிசெய்யும் புதிய குறைந்தபட்ச வழிகாட்டுதல்களுக்கு தொழிற்துறை நடுவர் அமைப்பான 'Fair Work Commission' (FWC) ஒப்புதல் அளித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட இந்த உத்தரவின்படி, விநியோகப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் 31.30 ஆஸ்திரேலிய டாலர்கள் ($22.11) ஊதியமாக வழங்கப்படும்.
இது ஆஸ்திரேலியாவின் தற்போதைய தேசிய குறைந்தபட்ச ஊதியமான 26.44 ஆஸ்திரேலிய டாலர்களை விட அதிகமாகும். இருப்பினும், விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பைக் காப்பீட்டை (Third-party insurance) தொழிலாளர்களே பராமரிக்க வேண்டும்.
மேலும், நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு "நியாயமான குறைந்தபட்ச அளவிலான" தனிநபர் விபத்துக் காப்பீட்டை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், காப்பீட்டின் சரியான தொகையளவு குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை. இந்த புதிய உத்தரவு ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வரவுள்ளதால், சுமார் 2,50,000 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உத்தரவின் கீழ், ஒரு பணியை ஏற்றுக்கொண்டு அதை முடிக்கும் வரை இடைப்பட்ட நேரத்திற்கு ("Engaged" time) குறைந்தபட்ச மணிநேர ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஜூன் மாதம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கிக் தொழிலாளர்களுக்கான ஊதியம், பாதுகாப்பு மற்றும் சமூக நலன்களை உறுதி செய்யும் முதல் பிணைப்பு சட்டங்களை (binding employment standards) ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைப்பின் அந்தச் சட்டங்கள் இன்னும் நாடுகளின் அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது.
FWC அமைப்பின் இந்த உத்தரவை, "ஆஸ்திரேலிய கிக் பொருளாதாரத்தின் ஒரு மைல்கல் தருணம்" என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (TWU) வரவேற்றுள்ளது.
"ஆஸ்திரேலியாவில் உள்ள கிக் தொழிலாளர்கள் நீண்டகாலமாக நமது பணித்தள அமைப்புகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்தனர். திங்கட்கிழமை முதல், அவர்களுக்கு உலகிலேயே முன்னணியில் உள்ள உரிமைகள் மற்றும் தரநிலைகள் கிடைக்கவுள்ளன. காலப்போக்கில் இதை நாங்கள் மேலும் வலுப்படுத்துவோம்," என்று TWU தேசியச் செயலாளர் மைக்கேல் கெய்ன் (Michael Kaine), ஊபர் ஈட்ஸ் (Uber Eats) மற்றும் டோர்டாஷ் (DoorDash) நிறுவனங்களுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உணவக விநியோகத்தைத் தாண்டி தங்களது சேவைகளை விரிவுபடுத்தி வரும் ஊபர் ஈட்ஸ் மற்றும் டோர்டாஷ் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கான வலுவான பாதுகாப்பும், கிக் தொழிலாளர்கள் விரும்பும் பணி நெகிழ்வுத்தன்மையும் (flexibility) கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை இந்தப் புதிய விதிகள் நிரூபிக்கும் எனக் கூறியுள்ளன.
பொதுவாக கிக் தொழிலாளர்கள் நிறுவனப் பணியாளர்களாகக் கருதப்படாமல், 'சுயாதீன ஒப்பந்தக்காரர்களாகப்' (independent contractors) பார்க்கப்படுவதால், அவர்களுக்குப் பெரும்பாலான பணித்தளப் பாதுகாப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. இதனால் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் நீண்டகாலமாகச் சீர்திருத்தங்களைக் கோரி வந்தனர்.
ஆஸ்திரேலியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் மைய- இடதுசாரியான தொழிலாளர் கட்சி (Labor) அரசாங்கத்தின் கீழ், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கிக் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் நிபந்தனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கும் அதிகாரம் அளிக்கும் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இச்சட்டங்களே Fair Work Commission அமைப்புக்கு ஊதியம் மற்றும் காப்பீட்டுத் தரநிலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்கின.