ஆஸ்திரேலியாவிற்கு வந்து ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த 14 வயதான தினேத் பெர்னாண்டோ (Dineth Fernando) உலக இளையோர் ஸ்கிராபிள் சாம்பியன்ஷிப் (World Youth Scrabble Championship) பட்டத்தைக் கைப்பற்றி உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார்.
நைரோபியில் நடைபெற்ற இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட 140 போட்டியாளர்களை வீழ்த்தி தினேத் இப்பட்டத்தை வென்றுள்ளார்.
தினசரி ஸ்கிராபிள் விளையாட்டின் அதிகாரப்பூர்வ அகராதியிலிருந்து 200 வார்த்தைகளைப் பயிற்சி செய்ததே தனது இந்த வெற்றிக்குக் காரணம் என இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தினேத் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கொண்ட மெல்போர்னில் வசிக்கும் இந்தச் சிறுவன், இந்த விளையாட்டு ஆஸ்திரேலியாவில் தனது அடையாளத்தைக் கண்டுகொள்ளவும், புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் உதவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது 8 ஆவது வயதில் பள்ளியின் மூலம் இந்த விளையாட்டிற்குள் நுழைய நேர்ந்ததாகவும், விளையாட்டு மீது கொண்ட ஆர்வத்தால் 2024 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலிய இளையோர் ஸ்கிராபிள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதே, உலக இளையோர் போட்டியில் பங்கேற்பதற்கான ஊக்கத்தை அவருக்கு அளித்துள்ளது.
பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் காரணமாக இலங்கையில் ஸ்கிராபிள் விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது என்று குறிப்பிட்ட தினேத், "பள்ளிகளில் ஸ்கிராபிள் கிளப்புகள் உள்ளன, மேலும் போட்டிகள் மிகவும் சவாலாக இருக்கும்" என்றும் கூறினார்.
மொழி சார்ந்த விளையாட்டில் இத்தகைய சாதனையைப் படைத்துள்ளபோதிலும், கணிதம் மற்றும் அறிவியலில் அதிக ஆர்வம் கொண்ட தினேத், எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மருத்துவ உலகைச் சேர்ந்த அவரது தந்தை பிரசன்னா பெர்னாண்டோ, தனது கல்வி மற்றும் பணி காரணங்களுக்காகக் கடந்த பிப்ரவரி மாதமே குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்ததாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றத்திற்கு மத்தியில், கென்ய தலைநகருக்கு 25 மணி நேரப் வான்வழிப் பயணத்தை மேற்கொண்டு தனது மகன் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து அவர் மிகுந்த பெருமிதம் தெரிவித்தார்.
"இது ஒரு கனவு போல இருக்கிறது. அவன் ஒரு நாள் இதை வெல்வான் என்று எனக்குத் தெரியும், ஆனால் இன்னும் இதை என்னால் நம்ப முடியவில்லை. கடைசி நிமிடத்தில் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் நாங்கள் இருவரும் செல்ல முடிவு செய்தோம். அதிர்ஷ்டவசமாக அது பலனளித்துள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என பிரசன்னா பெர்னாண்டோ கூறினார். மேலும், தினேத்திற்கு பல ஆண்டுகளாகப் பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர் ரஷீத் சுடினுக்கும் (Rashid Sudin) அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் கல்வி மற்றும் விளையாட்டுத்திறனில் உள்ள நன்மைகள் காரணமாக இந்த விளையாட்டை ஊக்கப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு மாறாக, ஆஸ்திரேலியாவில் பள்ளி அளவில் ஸ்கிராபிள் விளையாட்டு அந்த அளவிற்கு பிரபலமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய இளையோர் ஸ்கிராபிள் விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் தலைவர் டோனி ஹன்ட் கூறுகையில், சிட்னியின் தென்மேற்கில் உள்ள காப்ரமட்டா அரசுப் பள்ளியில் மட்டுமே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கிராபிள் உள்ளதாகத் தெரிவித்தார். விக்டோரியாவில் உள்ள சில திறன்மிகு மாணவர்களுக்கான திட்டங்களில் இது ஒரு கூடுதல் நடவடிக்கையாக வழங்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தை மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்த விரும்புவதாகக் கூறிய திரு. ஹன்ட், "இதை வெறும் விளையாட்டாக மட்டுமல்லாமல், எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தும் ஒரு கருவியாக மக்கள் கருத வேண்டும். திறன்மிகு குழந்தைகளுக்கான கூடுதல் செயல்பாடாகக் கல்வியாளர்கள் ஸ்கிராபிளைப் பரிசீலிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.