பிராந்தியத்தின் வளர்ச்சியைச் சமநிலைப்படுத்தும் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில அரசின் புதிய வரைவுத் திட்டத்தின் கீழ், கிரேட்டர் சிட்னி பிராந்தியத்தில் அடுத்த 20 ஆண்டுகளில் கட்டப்படும் பெரும்பாலான புதிய வீடுகள் கிழக்குப் புறநகர்ப் பகுதிகளிலேயே அமையவுள்ளன.
அதேவேளையில், மேற்கு சிட்னி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது விமான நிலையம், மூர்பேங்க் இண்டர்மோடல் வளாகம் (Moorebank Intermodal Precinct) மற்றும் பரந்த தொழிற்பேட்டை நிலங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளைப் பயன்படுத்தி, அப்பகுதி பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும்.
2046-ஆம் ஆண்டிற்குள் கிரேட்டர் சிட்னியில் கூடுதலாக இணையவுள்ள 13 லட்சம் (1.3 மில்லியன்) மக்களுக்குத் தேவையான வீடுகள் மற்றும் பணிபுரியும் இடங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கோடிட்டுக் காட்டும் அரசின் 'சிட்னி பிளான்' (Sydney Plan) திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இவைதான்.
இந்த 20 ஆண்டு கால தொலைநோக்குத் திட்டத்தை விளக்கிக் கூறிய நகரமைப்பு அமைச்சர் போல் ஸ்கல்லி (Paul Scully), நிலப்பரப்புகளை அகலப்படுத்தி விரிவாக்குவதை விட, இருக்கும் கட்டமைப்புகளுக்கு மேலே உயரமான கட்டிடங்களை உருவாக்குவதன் மூலம் கிரேட்டர் சிட்னியைச் சமநிலைப்படுத்துவதே இதன் நோக்கம் என்றார்.
"மேற்குப் பகுதியிலும் வீடுகள் இருக்கும், கிழக்குப் பகுதியிலும் வேலைவாய்ப்புகள் வளரும். ஏற்கனவே உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக உள்ள இடங்களை மையமாகக் கொண்டு, சிட்னியின் வீட்டுவசதி வளர்ச்சியைச் சமநிலைப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியே இது" என்று அவர் கூறினார்.
இருப்பினும், தற்போதைய உள்கட்டமைப்புகளுக்கு அருகில் வீடுகளைக் கட்டுவது நல்ல யோசனைதான் என்று ஒப்புக்கொண்ட எதிர்கட்சித் தலைவர் கெல்லி ஸ்லோன் (Kellie Sloane), பள்ளிகள் மற்றும் மெட்ரோ ரயில் பாதைகள் குறித்த தகவல்கள் இதில் இல்லை என விமர்சித்தார்.
"இந்தத் திட்டம் உடனடியாக எதையும் செயல்படுத்தப் போவதில்லை; சிட்னிக்கு மற்றொரு புதிய வீட்டைக் கட்டப்போவதும் இல்லை. உள்கட்டமைப்பு மற்றும் பள்ளிகளைப் பற்றி இது எதுவும் பேசவில்லை. தற்போதைய தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாதபோது, 20 ஆண்டுகள் கழித்து வரப்போகும் திட்டத்தை எப்படி நம்புவது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தற்போதைய வீட்டுவசதி நெருக்கடி மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், 30 ஆண்டுகால வீட்டுவசதி இலக்கை அடைவதற்குத் தேவையான நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் மண்டல வாரியாகப் பிரித்துத் (zoned) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட காலம் எடுக்கும் நகரமைப்பு திட்டமிடல் செயல்முறைகள் ஏற்கனவே முடிவடைந்திருப்பதால், புதிய கட்டுமானப் பணிகளை உடனுக்குடன் விரைவுபடுத்த முடியும்.
இது குறித்து அமைச்சர் போல் ஸ்கல்லி கூறுகையில், "அடுத்த 20 ஆண்டுகளில் சிட்னிக்குக் குறைந்தபட்சம் 8,00,000 கூடுதல் வீடுகளும், சுமார் 9,50,000 வேலைவாய்ப்புகளும் தேவைப்படும். அதனால்தான் இந்த நீண்டகால நிபந்தனையை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம் நாம் தற்போது சந்திக்கும் வீட்டுவசதி சிக்கலில் மீண்டும் போய் மாட்டிக்கொள்ள மாட்டோம்" என்றார்.
நீண்டகாலத் திட்டமிடல் நிபந்தனையை ஒரு "நல்ல யோசனை" என நியூ சவுத் வேல்ஸ் உள்ளாட்சி அமைப்பு (Local Government NSW) வரவேற்றுள்ளது.
உள்மேற்கு கவுன்சிலின் மேயரும், அமைப்பின் தலைவருமான டார்சி பைர்ன் (Darcy Byrne) கூறுகையில், "சிட்னியின் வீட்டுவசதி நெருக்கடி மிகவும் தீவிரமானது. ஓரிரு ஆண்டுகளிலோ அல்லது ஐந்து ஆண்டுகளிலோ இதிலிருந்து நம்மால் மீண்டு விட முடியாது. எனவே, போதுமான வீடுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நீண்டகாலத் திட்டம் சிட்னிக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். உள்மேற்கு பகுதியில் நாங்கள் அதைத்தான் செய்ய முயற்சித்து வருகிறோம்" என்றார்.
இத்திட்டத்தின் கீழ், கிழக்கு சிட்னி பெரும்பாலான வீட்டுவசதி வளர்ச்சியை ஏற்றுக்கொள்வது மட்டுமன்றி, டவுன்ஹவுஸ்கள் மற்றும் அபார்ட்மெண்ட்டுகள் போன்ற பல்வேறு வகையான வீடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க முடியும் என்பதே இதற்குக் கூறப்படும் விளக்கமாகும்.
"மின்ஸ் (Minns) அரசு முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விடக் குறைந்த அளவிலான வீட்டுவசதி வகைகளே சிட்னியில் இருந்தன. அதுவே தற்போதைய வீட்டுவசதி சவால்களுக்கும், விலை ஏற்றத்திற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது" என்று அமைச்சர் ஸ்கல்லி தெரிவித்தார்.
தேசிய வீட்டுவசதி ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு சிட்னி கவுன்சில் பகுதிகளுக்கு ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கான அதிகபட்ச வீட்டுவசதி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது அனைத்துப் புதிய கட்டுமானங்களில் பாதியை அடக்குகிறது. இதற்கு மாறாக, மேற்கு சிட்னி கவுன்சில் பகுதிகளுக்குக் கால் பங்கிற்கும் குறைவான இலக்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாறாக, நகரின் மேற்குப் பகுதி தனது தொழிற்பேட்டை நிலங்கள் மற்றும் சொத்துக்களைப் பயன்படுத்தி, "தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாதார மையமாகத் தனது இடத்தை உறுதிப்படுத்துவது" மட்டுமே அதன் முதன்மை நோக்கம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம், மூர்பேங்க் இண்டர்மோடல் வளாகம் மற்றும் பரந்த தொழிற்பேட்டை நிலங்களைப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு தசாப்தங்களில் மாநிலத்தின் சரக்கு போக்குவரத்து மற்றும் தொழிற்துறை விரிவாக்கத்தை இப்பகுதி முன்னெடுக்கும்.
கிரேட்டர் சிட்னியின் தொழிற்பேட்டை நிலங்களில் பாதியும், இன்னும் மேம்படுத்தப்படாத தொழிற்பேட்டை நிலங்களில் 80 சதவீதமும் நகரின் மேற்குப் பகுதியிலேயே அமைந்திருக்கும்.
காரணமாக, அடுத்த இரண்டு தசாப்தங்களில் வேலைவாய்ப்பு 4,75,000-லிருந்து 7,55,000 ஆக (59 சதவீதம்) உயரும் என அரசு கணித்துள்ளது.
சிட்னி, பரமட்டா மற்றும் பிராட்பீல்ட் நகரங்கள் கிரேட்டர் சிட்னியின் முக்கிய 3 வணிக மையங்களாகத் (CBDs) தொடர்ந்து செயல்படும்.
அவற்றைச் சுற்றி டஜன் கணக்கான "ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மையங்கள்" அமைக்கப்பட்டு, அவை வேலைவாய்ப்பு, சேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் புகலிடமாக விளங்கும். இதில் புரூக்வேல், ஹார்ன்ஸ்பி, கேஸில் ஹில், மார்ஸ்டன் பார்க், செயின்ட் மேரிஸ், ரோட்ஸ், புர்வுட், போண்டி ஜங்ஷன், ஹர்ஸ்ட்வில், மிராண்டா மற்றும் நாரெல்லன் உள்ளிட்ட பல பகுதிகள் அடங்கும்.
"இந்த மையங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சியோடு குடியிருப்பு வளர்ச்சியும் ஊக்கவிக்கப்பட்டு, துடிப்பான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட பகுதிகள் உருவாக்கப்படும்" என்று போல் ஸ்கல்லி கூறினார்.
ரவுஸ் ஹில் மற்றும் கொகாரா ஆகியவை "வளர்ந்து வரும் முக்கிய மையங்களாகவும்", லெப்பிங்டன், ஃபைவ் டாக், எட்ஜ்கிளிஃப், ஃபேர்ஃபீல்ட், ஓரான் பார்க் மற்றும் வில்டன் ஆகியவை "வளர்ந்து வரும் செயல்பாட்டு மையங்களாகவும்" அடையாளம் காணப்பட்டுள்ளன.
நகர்ப்புறக் கொள்கை ஆராய்ச்சி அமைப்பான 'கமிட்டி ஃபார் சிட்னி' (Committee for Sydney) இந்தச் சிட்னி திட்டத்தைப் பாராட்டியுள்ளது.
"நீண்ட காலமாக, அபார்ட்மெண்ட்டுகளில் குழந்தைகளுடன் வாழ்வதை சாத்தியமில்லாத ஒன்றாகவே நாம் வைத்திருந்தோம் என்பதே உண்மை" என்று அதன் தலைமை நிர்வாகி கூறினார்.