ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டத்தை (Gun Buyback Scheme) நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடத் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்துள்ளார்.
"இந்த விவகாரம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மிக முக்கியமானது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை, மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், தெருக்களில் சட்டவிரோதமாக புழங்கும் சுமார் 274,000 துப்பாக்கிகளை மீட்டெடுக்கும் திட்டம் குறித்து முறைப்படி அறிவித்தனர்.
போர்ட் ஆர்தர் (Port Arthur) படுகொலை சம்பவத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட துப்பாக்கி மீட்புத் திட்டத்தை விட, இம்முறை அதிக அளவிலான துப்பாக்கிகள் புழக்கத்திலிருந்து அகற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
இதன் விவரங்கள் வருமாறு:
நவம்பர் 2 முதல் துப்பாக்கி வைத்திருப்பதற்கான வரம்பை மீறியவர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்தால், $1,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தை மதிப்பு $3,000-க்கும் அதிகமாக உள்ள உயர்தர துப்பாக்கிகளுக்கு அதிகபட்சமாக $10,000 வரை இழப்பீடு தொகையாக உயர்த்தப்படும்.
பாண்டி பீச் (Bondi Beach) பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு கொண்டுவரப்படும் புதிய சட்டங்களின் "முதல் கட்ட நடவடிக்கையாக" இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும், இச்சட்டங்களை எதிர்க்கும் வன் நேஷன் (One Nation) கட்சி, மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் இந்தச் சட்டங்களை ரத்து செய்யப்போவதாகத் திட்டமிட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த மின்ஸ், "எல்லாச் சட்டங்களையும் ரத்து செய்யப் போவதாக வன் நேஷன் கட்சி கூறியுள்ளது. எனவே, நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாக்குப்பதிவில் இந்த விஷயம் முக்கியப் பங்க வகிக்கும்.
இது நியூ சவுத் வேல்ஸுக்கு மிகவும் முக்கியமானது. இதற்காகத் தேர்தலில் போட்டியிட நாங்கள் தயார். எங்கள் நிலையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை; வாக்காளர்கள் வாக்களிக்கும் போது இதை மனதில் கொள்ள வேண்டும்" என்றார்.