மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சம்பவம்ஒன்றில் தமது அணையைச் சேர்ந்த பல வீரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதை 'சிட்னி ஸ்வான்ஸ்' (Sydney Swans) ஆஸ்திரேலிய கால்பந்து கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று நண்பகலுக்குப் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அந்த கழகம், "இந்த விவகாரம் குறித்து AFL (ஆஸ்திரேலிய கால்பந்து லீக்) நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இது குறித்து மேலதிக விவரங்களை வழங்க முடியாது" என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிழக்கு மெல்போர்னில் பதிவான பாலியல் அத்துமீறல் முறைப்பாடு குறித்து துப்பறியும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக விக்டோரியா பொலிஸார் தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
"வெலிங்டன் பேரடில் (Wellington Parade) உள்ள ஒரு விடுதியில் (Hotel) அதிகாலை வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான முழுமையான பின்னணி இன்னும் கண்டறியப்படாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று எம்.சி.ஜி (MCG) மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 'எசென்டன்' (Essendon) அணியை 36 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததைத் தொடர்ந்து, சிட்னி ஸ்வான்ஸ் அணி வீரர்கள் இரவைக் கழிப்பதற்காக மெல்போர்னில் தங்கியிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2026 ஆம் ஆண்டின் AFL தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னதாக புள்ளிப்பட்டியலில் சிட்னி அணி 2-வது இடத்தில் உள்ளதுடன், இன்னும் சில வாரங்களில் இறுதிப் போட்டிகள் (Finals) தொடங்கவுள்ளன.
நடப்புப் பருவத்தில் 17 வெற்றிகளைப் பதிவுசெய்துள்ள அந்த அணி, தனது அடுத்த போட்டியில் 'நார்த் மெல்போர்ன்' அணியை எதிர்த்து சொந்த மைதானமான SCG-யில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.