ஆஸ்திரேலியாவைப்போன்று சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த நாடாக இலங்கை குறுகிய காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்ற ‘இலங்கை தொழில்முனைவோர் இரவு 2026’ (Sri Lankan Entrepreneurs’ Night 2026) நிகழ்வில் கலந்துகொண்டு புலம்பெயர் இலங்கையர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "கல்வி, வியாபாரம் அல்லது சுதந்திரமான வாழ்க்கைக்காகவே நீங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருக்கலாம்.
எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகப் படிக்கவும் வாழவும் கூடிய, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படும் அவுஸ்திரேலியாவைப் போன்றதொரு நாடாக இலங்கையை மாற்றுவோம் என உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்" என்று பிரகடனம் செய்தார்.
இலங்கையின் தற்போதைய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பலமான உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் புலம்பெயர் தொழில்முனைவோரும் முதலீட்டாளர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஊழலற்ற, முதலீடுகளுக்கு உகந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட புதிய பொருளாதார சூழல் இலங்கையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னின்று உழைக்குமாறு இலங்கைத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார்.
ஆஸ்திரேலிய இலங்கை வர்த்தக மன்றத்தினால் (ASLBF) ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மெல்போர்னுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் பிரதீபா சாரம், அவுஸ்திரேலிய கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷன ஜெயவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.