ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீ விபத்துக்கான அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தீ மற்றும் அவசரக்கால சேவைகள் கவுன்சில் (AFAC) வெளியிட்டுள்ள தற்போதைய பருவக்காலக் கணிப்பின்படி, இந்த வசந்த காலத்தில் தலைநகர் மண்டலத்தை (ACT) தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலவும் வறண்ட காலநிலை மற்றும் மத்திய, வடக்கு ஆஸ்திரேலியப் பகுதிகளில் காய்ந்த தாவரங்கள் மற்றும் புற்கள் (எரிபொருள் பயன்பாடு போல செயல்படுபவை) அதிகளவில் குவிந்துள்ளதே இந்த ஆபத்திற்கு முக்கியக் காரணமாகும்.
"வெவ்வேறு பிராந்தியங்களில் நிலவும் பல்வகை ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்கள் உள்ளூர் வானிலைச் சூழலைப் புரிந்து கொண்டு முன்கூட்டியே தயாராக வேண்டும்" என்று AFAC தலைமைச் செயல் அதிகாரி ராப் வெப் தெரிவித்துள்ளார்.
மேலும், "சில பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் அதிகமாக இருந்தாலும், வழக்கமான சூழ்நிலை கொண்ட பகுதிகளிலும் காட்டுத்தீ பரவக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு யூனியன் பிரதேசத்தில் (Northern Territory) வசந்த காலத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருந்தாலும், காய்ந்த புற்களின் பரவல் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் தீ விபத்துக்கான சாத்தியக்கூறுகள் உயர்ந்துள்ளன.
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிகளவு உலர்ந்த தாவரங்கள் மற்றும் நிலத்தில் நிலவும் வறட்சி காரணமாகச் சில பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் தீவிரமாக உள்ளது.
தெற்கு விக்டோரியா மற்றும் ஃபிளிண்டர்ஸ் தீவு உள்ளிட்ட கிழக்குப் டாஸ்மேனியாவின் பெரும் பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பதிவாகியுள்ளதால் காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ளது.
இவற்றுடன் தென்கிழக்கு குவீன்ஸ்லாந்து, வடகிழக்கு நியூ சவுத் வேல்ஸ் மற்றும் வடமேற்கு தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காட்டுத்தீ பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
'எல் நினோ' காட்டுத்தீ அபாயத்தை தீவிரப்படுத்துமா?
கடந்த ஜூன் மாதம் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியதை அடுத்து, இம்முறை ஆஸ்திரேலியாவின் வசந்த மற்றும் கோடைகாலம் எவ்வாறு அமையுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. மேலும், இது வரலாற்றிலேயே மிகக் கடுமையான எல் நினோவாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது.
எல் நினோ காலக்கட்டத்தில், குறிப்பாகக் கிழக்கு ஆஸ்திரேலியாவில் மழைப்பொழிவு குறைவதுடன், நாட்டின் தெற்குப் பகுதி முழுவதும் வெப்பம் அதிகரிக்கும். இது தீவிரமான காட்டுத்தீச் சூழலை உருவாக்க வழிவகுப்பதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க வெப்பமான மற்றும் வறண்ட ஆண்டுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இருப்பினும், வானிலையைத் தீர்மானிக்கும் பல காரணிகளில் எல் நினோவும் ஒன்று என்பதால், ஒவ்வொரு ஆண்டும் இது ஆஸ்திரேலியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் துல்லியமாகக் கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) மற்றும் தெற்கத்திய வளைய முறைமை (SAM) போன்ற பிற காலநிலை இயக்கிகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதுதவிர, உள்ளூர் கடல்மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் இயற்கை வானிலை மாற்றங்களும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மத்திய பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் போது எல் நினோ உருவாகிறது. இம்முறை இது 'சூப்பர் எல் நினோ' எனக் குறிப்பிடப்படுவதற்கு, அதன் முன்னறிவிப்பு சமிக்ஞைகள் வழக்கத்திற்கு மாறாக மிக அதிகளவில் பதிவாகியிருப்பதே காரணமாகும்.
கடந்த 2023-24 எல் நினோ காலத்தில், 1910-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக வெப்பமான குளிர் மற்றும் வசந்த காலம் பதிவானது. ஆனால், இது மழைப்பொழிவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னமும் தெளிவாகக் கணிக்கப்படவில்லை.
"அலட்சியம் வேண்டாம்"
கடந்த மாதத்தில் வடக்கு மற்றும் மத்திய ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிக மழை பெய்த போதிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் பெரும்பாலான இடங்களில் வழக்கத்திற்கு மாறான வறட்சி நிலவியது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையும் சராசரியை விட அதிகமாகவே இருந்தது. இந்த வெப்ப அலை வசந்த காலம் முழுவதிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.