ஆஸ்திரேலிய நிவாரணப் பணியாளர் சோமி பிராங்க்ளின் (Zomi Frankcom) கொல்லப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு குற்றவியல் விலக்கு அளித்த அறிக்கையை, ஆஸ்திரேலியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ஹிலெல் நியூமன் (Hillel Newman) தீவிரமாகத் தற்காத்துப் பேசியுள்ளார்.
"தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு இந்த அறிக்கை பொருந்தவில்லை என்பதற்காக, முறையான விசாரணை முடிவுகளைத் தாக்கக் கூடாது" என்றும் அவர் சாடியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு காசாவில் 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (WCK) அமைப்பின் வாகனங்கள் மீது இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில் சோமி பிராங்க்ளின் உட்பட 7 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இரு ஆண்டுகள் நீடித்த இந்த விசாரணை முடிவில், எவர் மீதும் குற்றவியல் வழக்குத் தொடரப்படாது என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) அறிவித்தது.
அதேவேளை, இஸ்ரேலிய இராணுவம் தன் சொந்தத் தவறுகளைத் தானே நடுநிலையோடு விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (WCK) நிறுவனம், இச்சம்பவம் குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.