ஆஸ்திரேலியாவில் வேலையின்மை வீதம் தொடர்ந்து மெதுவாக உயர்ந்து வருகிறது. ஜூன் மாதத்தில் 4.4 சதவீதமாக இருந்த வேலையின்மை வீதம், ஜூலை மாதத்தில் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பதிவான மிக உயர்ந்த வேலையின்மை வீதம் இதுவாகும்.
வரும் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாகக் குறையும் என்ற ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் (RBA) எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே இந்த மாற்றம் அமைந்துள்ளதாகக் குறிப்பிடும் பொருளாதார வல்லுநர்கள், இதன் காரணமாக மீண்டும் வட்டி வீதம் உயர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனத் தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் பகுதிநேர வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்ததன் காரணமாக, வேலைவாய்ப்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 15,800 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வேலையற்றோரின் எண்ணிக்கை 4,200 ஆல் அதிகரித்துள்ளது.
சொத்துக்களின் விலை உயர்வில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் எதிர்பார்த்ததை விடக் குறைவாகப் பதிவான பணவீக்க விகிதம் ஆகியவற்றைக் சுட்டிக்காட்டும் பொருளாதார நிபுணர்கள், செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுக் கூட்டத்தில் வட்டி வீதங்களில் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கின்றனர்.
பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ள நெருக்கடியைக் குறைக்க வேண்டியது அவசியமானது என ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மிஷெல் புல்லக் (Michele Bullock) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் வேலையின்மை வீதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ள நிலையில், தற்போதைய தரவுகள் வட்டி வீத உயர்வைக் கட்டுப்படுத்த உதவினாலும், பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கை இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.