ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முனையும் குடும்ப விசா விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முன்னுரிமை வரிசையில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சு முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
கடந்த ஜூலை 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள 'அமைச்சரவை உத்தரவு 117' (Ministerial Direction 117) இன் படி, துணைவர் (Partner), பிள்ளை (Child), பெற்றோர் (Parent) உள்ளிட்ட குடும்ப விசா திட்டங்களுக்கான பரிசீலனை முன்னுரிமைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்களின் முக்கிய அம்சங்கள்
அதிக முன்னுரிமை: ஆஸ்திரேலியாவில் உள்ளபோதே குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்து, நாட்டின் உள்ளேயே (Onshore) விசா பெறத் தகுதியுடைய விண்ணப்பங்களுக்குப் பரிசீலனையில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.
குறைந்த முன்னுரிமை: ஆஸ்திரேலியாவிற்கு வெளியே இருந்து (Offshore) விண்ணப்பிக்கும் அல்லது விசா பெறும்போது ஆஸ்திரேலியாவிற்கு வெளியே இருக்க வேண்டிய நிபந்தனை கொண்ட விண்ணப்பங்களுக்குக் குறைந்த முன்னுரிமையே வழங்கப்படும். இதன் காரணமாக அவர்களின் விசா பரிசீலனைகளுக்குக் கூடுதல் காலம் எடுக்கலாம்.
முந்தைய விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்: 2026 ஜூலை 25 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டு, இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத பழைய விண்ணப்பங்களுக்கும், இனிவரும் புதிய விண்ணப்பங்களுக்கும் இப் புதிய நடைமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விசா பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும், மிகக் கடுமையான மற்றும் இரக்கத்திற்குரிய சிறப்புச் சூழல்கள் (compassionate and compelling circumstances) இருக்கும் பட்சத்தில் மட்டுமே தனிப்பட்ட அடிப்படையில் பரிசீலித்து முன்னுரிமை மாற்றி வழங்கப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.