இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், கனிம வளங்கள், ஆற்றல் (சக்தி) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன.
தென்சீனக் கடலில் நிலவும் பதற்றங்கள், சர்வதேசப் பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் சவால்களுக்கு மத்தியிலேயே இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவிற்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் டொங் ஜுன் ஆகியோர், இந்தோனேசியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திப்பின் தொடக்கத்தில் உரையாற்றிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ,
"இரு நாடுகளும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய சர்வதேசச் சூழல் மிகவும் சிக்கலானது.
ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளும் ஆதிக்கச் செயற்பாடுகளும் உலகளாவிய ஒத்துழைப்பிலும் ஸ்திரத்தன்மையிலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தோனேசியாவுடனான உயர் மட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்த சீனா தீவிரமாக முயல்கிறது" எனக் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்பு, ரயில் போக்குவரத்து, பசுமை ஆற்றல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் மீன்பிடித்துறை உள்ளிட்ட பல துறைகளில் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன.
அதேவேளை, இந்த கூட்டணி தொடர்பில் இந்தோனேசியாவின் அண்டை நாடான ஆஸ்திரேலியா கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
பசுபிக் தீவுகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.