ஆஸ்திரேலியாவின் விம்மரா (Wimmera) பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியான Layla Jeffery படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்டுள்ள 16 வயது சிறுவன் குற்றத்தைச் செய்துள்ளார் என்பதைக் காட்டுவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாகச் சிறுவர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 5-ஆம் திகதி டொனால்ட் (Donald) பகுதியில் காணாமல் போன லேலா ஜெப்ரியின் சடலம், ஜூலை 9-ஆம் திகதி புதர் நிலப் பகுதியொன்றில் இருந்து மீட்கப்பட்டது.
இக்கொலை வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 16 வயது சிறுவன், சிறுவர் சிறையில் இருந்து விடியோ இணைப்பு மூலமாக விக்டோரியா சிறுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த சிறுவர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜேக் வண்டர்ஸ்டீன் (Jack Vandersteen), "குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் இதில் முதன்மைச் சந்தேகநபராக சேர்க்கப்பட்டுள்ளார். அவன் இக்குற்றத்தைச் செய்துள்ளார் என நம்புவதற்குப் போதுமான நியாயமான காரணங்கள் உள்ளன.
அத்துடன், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து பெறப்பட்ட பொருள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாகச் சிறுவனிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ (DNA) மாதிரியை அழித்துவிட்டு, புதிய மாதிரியைப் பெறுவதற்குப் பொலிஸாருக்கு அனுமதியளிக்குமாறு முதன்மை அரசுத் தரப்பு வழக்கறிஞர் கிறிஸ்டி சர்ச்சில் கோரியிருந்தார். இதனையேற்று புதிய டி.என்.ஏ மாதிரியைப் பெறப் பொலிஸாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
மேலும், வாய்வழி மாதிரி (Mouth swab) வழங்குவதற்குச் சிறுவன் ஒத்துழைக்க மறுத்தால், பொலிஸார் நியாயமான பலத்தைப் பயன்படுத்தி அதனைப் பெற முடியும் என்றும் நீதிபதி எச்சரித்தார். அதற்கு அந்தச் சிறுவன் "சரி" எனப் பதிலளித்ததுடன், நீதிபதியிடம் தனக்கு வேறு கேள்விகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அலட்சியமான நடத்தை
நீதிமன்ற விசாரணையின் போது கருப்பு நிறத் தொப்பி (Beanie) மற்றும் கருப்பு நிறச் சட்டையை அணிந்தவாறு சிறுவன் தோற்றமளித்தார். விசாரணையின் தொடக்கத்தில் தொப்பியைக் கழற்றுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, விசாரணை முழுவதும் முழங்கால்களில் முழங்கைகளை ஊன்றியவாறு அமர்ந்திருந்த அந்தச் சிறுவன், அவ்வப்போது கொட்டாவி விட்டபடியும் அங்கும் இங்கும் பார்த்தபடியும் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 10-ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்