அடிலெய்ட் ஓவல் நடைபாலத்தில் சனிக்கிழமை இரவு நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு (Coward punch) மயக்கமடைந்த சம்பவ தொடர்பாக இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் 21 வயதுடைய இரு இளைஞர்கள், 38 மற்றும் 37 வயதுடைய இரு நபர்களை அணுகியதாகவும், அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெற்கு ஆஸ்திரேலிய (SA) பொலிஸார் தெரிவித்தனர்.
அன்று மாலை அடிலெய்ட் ஓவலில் நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நகரத்தில் திரண்டிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வாக்குவாதத்தின் போது 38 வயது நபர் முகத்தில் தாக்கப்பட்டதில், அவரது தலை தரையில் மோதி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். உடனடியாக அவர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் இருந்த 37 வயது நபரும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததுடன், தப்பிச் சென்ற சந்தேகநபர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் கிங் வில்லியம் வீதியில் உள்ள அனுமதி பெற்ற மதுபானக் கூடம் ஒன்றிற்குள் செல்வது அவதானிக்கப்பட்டது.
அங்குச் சென்ற அந்த இரு இளைஞர்களும் தங்களது ஆடைகளை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மவுண்ட் பார்கரைச் சேர்ந்த 21 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மீது தாக்குதல் மற்றும் காயத்தை ஏற்படுத்திய தாக்குதல் குற்றச்சாட்டுகளும், மற்றொருவர் மீது குற்றவாளிக்கு உதவிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து இதுவரை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்காத சாட்சிகள் யாரேனும் இருப்பின் உடனடியாக 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.