ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டின் (2026) முதல் பாதியில் பதிவான சாலை விபத்துகளின் எண்ணிக்கை இதே வேகத்தில் தொடர்ந்தால், 2017ஆம் ஆண்டிற்குப் பிறகான மிக மோசமான ஆண்டாக 2026 மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய விபத்துத் தரவுத்தளத்தின் (National Crash Dashboard) தரவுகளை 'டிரைவ்' (Drive) நிறுவனம் ஆய்வு செய்ததில், 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் சராசரியாக மாதத்திற்கு 111 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த மாத சராசரி ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் தொடர்ந்தால் அல்லது அதிகரித்தால், கடந்த பத்தாண்டுகளில் தலா நபர் அடிப்படையில் (per capita) மிக அதிக சாலை விபத்து மரணங்கள் பதிவான ஆண்டாக 2026 அமையும்.
2026 ஆம் ஆண்டில் இதுவரை ஆஸ்திரேலியச் சாலைகளில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதே சராசரி நீடித்தால், ஆண்டின் இறுதியில் மொத்த விபத்து மரணங்களின் எண்ணிக்கை 1,335 ஆக அல்லது அதற்கு மேலாக அதிகரிக்கக்கூடும்.
ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் 2026 ஆம் ஆண்டின் இறுதி மக்கள் தொகைக் கணிப்புடன் ஒப்பிடும்போது, இது 1,00,000 மக்களுக்கு 4.8 மரணங்கள் என்ற விகிதத்தைக் குறிக்கிறது. இது 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகான மிக உயர்ந்த விபத்து மரண விகிதமாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் சாலை மரணங்கள் அதிகரிக்க அதிவேகம், உள்கட்டமைப்பு குறைபாடுகள், ஓட்டுநர்களின் தவறு அல்லது போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வாகனங்களின் அளவு அதிகரித்து வருவது போன்றவை சாத்தியமான காரணங்களாக நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இது குறித்து மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற ஆபத்து மற்றும் மீள்தன்மைப் பிரிவின் இணைப் பேராசிரியர் மிலாத் ஹக்கானி தெரிவிக்கையில், "ஆஸ்திரேலியச் சாலைகளில் தற்போது மிக முக்கியப் பிரச்சினைகளாக இருப்பது: முதலாவது, வாகனங்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது. இரண்டாவது, போதைப்பொருட்களைப் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டுவது. மூன்றாவது, கிராமப்புற மற்றும் பிராந்தியச் சாலைகளின் பாதுகாப்பு நிலை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தரவுகளின் மூலம் ஆஸ்திரேலியாவின் சாலைப் பாதுகாப்புப் பயணத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதுகுறித்த விழிப்புணர்வே இந்த நிலையை மாற்றுவதற்கான முதல் படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.