முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் பாடல்கள் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இசைப் தரவரிசைப் பட்டியல்களில் (Music Charts) இடம்பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, பாடல்கள் தகுதி பெற அவை "பெரும்பாலும் மனிதர்களின் கலைப்படைப்பாக" இருக்க வேண்டும்.
ஆஸ்திரேலிய பதிவுத்துறை சங்கம் (ARIA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கலைத்துறையின் மனித இயல்பை ஊக்குவிக்கவே" இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிஜே (DJ) ஜோஷ் பவாஸ் என்பவர், மடோனாவின் புகழ்பெற்ற 'லைக்கும் ஏ பிரேயர்' (Like A Prayer) பாடலை AI தொழில்நுட்பம் மூலம் மறுஉருவாக்கம் செய்து வெளியிட்டார்.
இப்பாடல் ARIA நடன இசைப் பட்டியலில் முதலிடத்தையும், நாட்டின் ஒட்டுமொத்த தரவரிசையில் 2-வது இடத்தையும் பிடித்துப் பெரும் சர்ச்சை கிளப்பியது.
அலைவரிசைகள் மற்றும் வானொலிகளில் அதிகம் கேட்கப்பட்ட இப்பாடல், Spotify தளத்தில் மட்டும் 48 மில்லியனுக்கும் அதிகமான முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, ஜோஷ் பவாஸ் அந்தப் பாடலில் AI பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக பேசிய ARIA, ஆஸ்திரேலிய கலைஞர்கள் "வரலாற்றிலேயே மிகக் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் இக்காலத்தில், மனிதக் கலைத்திறன் இல்லாத AI பாடல்களின் வெற்றியை ஊக்குவிப்பதில் எமக்கு விருப்பமில்லை" எனக் குறிப்பிட்டது.
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்
பாடலை உருவாக்குவதில் AI-ன் உதவியைப் பெறலாம். ஆனால், பாடலை எழுதியவர், முதன்மைப் பாடகர் மற்றும் முதன்மை இசைக்கருவிகளை வாசித்தவர்கள் கண்டிப்பாக மனிதர்களாக இருக்க வேண்டும்.
பாடல்களை மாஸ்டரிங் செய்வதற்கும், 'ட்ரம் மிஷின்' (Drum machines) மற்றும் 'ஆட்டோ டியூன்' (Auto-tune) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் தொடர்ந்து அனுமதியுண்டு.
முன்னதாக, இதேபோன்று AI மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பாடலுக்கு ஸ்வீடன் நாட்டின் இசைப் தரவரிசையில் தடை விதிக்கப்பட்டது.
மேலும், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அதிகாரப்பூர்வ இசைப் பட்டியல்களிலும் AI கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்படும் என சர்வதேச ஒலிப்பதிவு தொழில் கூட்டமைப்பு (IFPI) கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது.