சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு 20 சதவீதம் வரி விதிப்பதன் மூலம், ஆஸ்திரேலியர்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்க முடியும் என்பதுடன், மில்லியன் கணக்கான பற்குழி (Tooth cavities) பாதிப்புகளையும் தடுக்க முடியும் எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
'பிஎம்ஜே பப்ளிக் ஹெல்த்' (BMJ Public Health) இதழில் புதன்கிழமை வெளியான Griffith University ஆய்வறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மென்பானங்கள் மற்றும் பெரும்பாலான பழச்சாறுகள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட மதுசாரமற்ற பானங்களுக்கு வரி விதிப்பதன் மூலம், அடுத்த 25 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா முழுவதும் 3.7 மில்லியன் பல் சிதைவு பாதிப்புகள், 1.91 லட்சம் ஈறு நோய் பாதிப்புகள் மற்றும் 1.15 லட்சம் முழுமையான பல் இழப்பு பாதிப்புகளைத் தடுக்க முடியும் என அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
பொது சுகாதாரத்திற்கு கூடுதல் பலன்
இந்த வரியின் மூலம் கிடைக்கும் வருவாயை சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும், பல் பராமரிப்புக்கான உலகளாவிய சுகாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பயன்படுத்தலாம் என ஆய்வு பரிந்துரைக்கிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட கிரிபித் பல்கலைக்கழக பொது சுகாதாரப் பேராசிரியர் லெனார்ட் வீர்மேன் (Lennert Veerman), "20 சதவீத சர்க்கரை வரியானது, பல் ஆரோக்கிய மேம்பாடுகள் மற்றும் உடல் எடை தொடர்பான நோய்களின் குறைப்பு ஆகியவற்றின் மூலம் ஆஸ்திரேலிய மக்களுக்கு சுமார் அரை மில்லியன் 'சுகாதார முறையில் சரிசெய்யப்பட்ட ஆயுட்காலங்களை' (Health-adjusted life years) வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
கணினி சார்ந்த மாதிரி அமைப்பின் (Computer-based simulation) மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சர்க்கரை பானங்களின் விலையில் ஏற்படும் ஒவ்வொரு 1 சதவீத உயர்வும், அவற்றின் நுகர்வை 1.2 சதவீதம் குறைக்கும் எனத் தெரியவந்துள்ளது.
அதன்படி, 20 சதவீத வரி முழுமையாக நுகர்வோருக்கு மாற்றப்பட்டால், சர்க்கரை பானங்களின் நுகர்வு 24 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் சிங்க்கேத் டியூக்-என்யுஎஸ் (SingHealth Duke-NUS) நிறுவனத்தைச் சேர்ந்த மார்கோ பெரெஸ் கூறுகையில், "சர்க்கரை வரி என்பது ஒரு தனிநபரின் நடத்தையை மட்டுமே நம்பியிருக்காமல், ஆரோக்கியமான தேர்வுகளை எளிதாக மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்க உதவுகிறது" எனக் குறிப்பிட்டார்.
பிரித்தானியாவின் வெற்றி உதாரணம்
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, உலகில் 116 நாடுகள் சர்க்கரை பானங்கள் மீது கலால் வரி விதித்துள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் (UK) பானங்களின் சர்க்கரை அளவைப் பொறுத்து லிட்டருக்கு 19.4 அல்லது 25.9 பென்ஸ் வரி விதித்தது. இதன் காரணமாக மென்பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவு 46 சதவீதம் குறைந்ததாகவும், சந்தையிலுள்ள 90 சதவீத பானங்கள் வரி வரம்பிற்குக் கீழ் சர்க்கரை அளவைக் குறைத்துக் கொண்டதாகவும் பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் எழும் விவாதங்கள்
ஆஸ்திரேலியாவில் சர்க்கரை வரியை அறிமுகப்படுத்த 2024 ஆம் ஆண்டைய நாடாளுமன்றக் குழு மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவச் சங்கம் (AMA) ஆதரவு தெரிவித்தன. இந்த வரியின் மூலம் அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் சுமார் 1.4 பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட முடியும் என நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் மதிப்பீடு செய்திருந்தது.
இருப்பினும், ஆஸ்திரேலிய பானங்கள் பேரவை (Australian Beverages Council) இக்கோரிக்கையை நிராகரித்ததுடன், இது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அதிகம் பாதிக்கும் எனக் குற்றம் சாட்டியது.
ஆனால், 2017 ஆம் ஆண்டு டீக்கின் பல்கலைக்கழகம் (Deakin University) நடத்திய ஆய்வில், சர்க்கரை வரியால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களே அதிக ஆரோக்கியப் பலன்களைப் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.