நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் சேற்றுச் சரிவில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத் தலைநகர் காட்மண்டூவிற்கு வடக்கே உள்ள ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை இந்தப் பேரழிவு ஏற்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவு, உருகிய பனிநீருடன் சேர்ந்து போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் பாய்ந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்
எல்லையின் இருபுறமும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 8 பேரை நேபாள ராணுவம் மீட்டுள்ளது. எனினும், பெருமளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என நேபாள அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த 12 பிரித்தானியப் பயணிகள், அமெரிக்கர்கள், மலேசியர்கள், தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் அடங்கலாக 291 சுற்றுலாப் பயணிகள் மற்றும் வழிகாட்டிகள் உட்பட 93 நேபாளியர்களின் நிலை குறித்து கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
முடங்கிய உள்கட்டமைப்புகள்
வெள்ளப்பெருக்கு காரணமாகத் தொலைத்தொடர்பு, மின்சாரம் மற்றும் வீதிப் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. காட்மண்டூவிற்கான பிரதான பாதையும் மூடப்பட்டுள்ளது. திரிசூலி நீர்மின் திட்டமும் இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.
திரிசூலி பஜார் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தின் சீற்றத்தில் பெரிய பாலங்கள் அடித்துச் செல்லப்படுவதும், அடுக்குமாடி மருந்தகங்கள் மற்றும் கட்டடங்கள் நொடிப்பொழுதில் சரிந்து விழுவதும் போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
"எந்தவொரு முன் எச்சரிக்கையுமின்றி திடீரெனவே இந்த வெள்ளம் தாக்கியது. அப்பகுதியில் இருந்த எங்களது 7 கொள்கலன் லொறிகளுடன் இருந்த ஊழியர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் சேவை முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது" என காட்மண்டூவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மைலுங் (Mailung) கிராமத்தில் சிக்கியுள்ள 115 பேரை மீட்கும் முயற்சியில் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை திமுரே, சியாப்ருபெசி மற்றும் பெட்ராவதி ஆகிய பகுதிகளில் மிக மோசமான உயிர்ச்சேதங்கள் பதிவாகியிருக்கலாம் என நேபாள உள்நாட்டலுவல்கள் அமைச்சு எச்சரித்துள்ளது.