தெற்கு ஆஸ்திரேலியாவின் பிளூரியூ தீபகற்பத்தில் (Fleurieu Peninsula) உள்ள கூல்வா (Goolwa) பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட டால்பின் ஒன்றிற்கு, H5N1 பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் டால்பின்களில் இத்தொற்று கண்டறியப்பட்டிருப்பது ஒரு "புதிய வளர்ச்சி" என்றும், அதேவேளை பிற நாடுகளில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெற்கு ஆஸ்திரேலியாவின் முதன்மைத் தொழில்கள் மற்றும் பிராந்தியங்கள் துறை (PIRSA) தெரிவித்துள்ளது.
அந்த டால்பின் "பறவை ஒன்றையோ அல்லது வனவிலங்குப் பறவை ஒன்றோடு நெருங்கிய தொடர்பையோ கொண்டிருந்திருக்கலாம்" என எதிர்பார்க்கப்படுவதாக மாநிலத்தின் தலைமை கால்நடை அதிகாரி டாக்டர் ஸ்கை ப்ரூவன் (Dr Skye Fruean) தெரிவித்துள்ளார்.
"டால்பின்கள் இந்த நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை, அதாவது அவை ஆபத்தில் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்" என்றும் அவர் கூறினார்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்குவது அரிது என்பதால், உலகளவில் இதுகுறித்த அறிக்கைகள் குறைவாகவே உள்ளன என்றும் டாக்டர் ப்ரூவன் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்த வாரத் தொடக்கத்தில் அடிலெய்டின் வடமேற்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நரி ஒன்றிற்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த டால்பின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 350-க்கும் மேற்பட்ட பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இரவோடு இரவாக மேலும் 46 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் மொத்த எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளது.
முன்னர் ஜிாலாங்கில் (Geelong) உள்ள CSIRO-வின் தேசிய ஆய்வகத்தின் கூடுதல் சரிபார்ப்பிற்குப் பிறகே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலை மாறி, தற்போது மாநிலத்தின் சொந்த ஆய்வகப் பரிசோதனை முடிவுகளையே அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள புதிய நடைமுறை அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஒரே இரவில் வழக்கத்தை விட அதிகமான சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக PIRSA தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை காரணமாக, நோய்த்தொற்று பரிசோதனை முடிவுகள் விரைவாக உறுதி செய்யப்படும் என டாக்டர் ப்ரூவன் தெரிவித்துள்ளார்.
"அடிலெய்டில் உள்ள எங்களது ஆய்வகத்திலும் தேசிய ஆய்வகத்திலும் ஒரே நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தோம். இரண்டிலும் ஒரே மாதிரியான முடிவுகளே தொடர்ந்து கிடைத்தன. எங்களால் முடிவுகளைத் துல்லியமாகக் கண்டறிய முடியாத சிக்கலான வழக்குகள் அல்லது விரிவான ஆய்வுகள் தேவைப்படும் சூழல்களில் மட்டுமே தேசிய ஆய்வகத்தின் உதவி தேவைப்படும்" என அவர் மேலும் விளக்கமளித்தார்.