தனது முன்னாள் மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த திருமணமான உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஆசிரியர் 2017 முதல் 2019 வரை குறித்த மாணவிக்கு இரண்டரை ஆண்டுகள் கற்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இருவரும் குறுஞ்செய்திகள் மற்றும் 'டெலிகிராம்' (Telegram) செயலி வழியாகச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
மாணவி பாடசாலைக் கல்வியை முடித்த பிறகு, அவர்களின் தொடர்பு தீவிரமடைந்து உடலியல் மற்றும் பாலியல் உறவாக மாறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒழுக்கக்கேடான நடத்தை தொடங்கும்போது அவருக்கு 26 வயது.
குயின்ஸ்லாந்து சிவில் மற்றும் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் (QCAT) தீர்ப்பின்படி, அந்த மாணவி 12 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது (18 வயதில்), ஒரு நாள் பாடசாலை நேரத்திற்குப் பிறகு தனது மனநலம் சார்ந்த போராட்டங்கள் குறித்து ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதன்பின்னர் இருவரும் பேசத் தொடங்கியதுடன், பாடசாலை நூலகத்திற்கு வெளியேயும், மாணவி பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போதே ஒருமுறை ஒரு விடுதியிலும் (Hotel) சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு நாளில், ஒரு முகாமில் இருவரும் விளையாட்டு (Board games) விளையாடிக் கொண்டிருந்தபோது, மேசைக்கு அடியில் ஆசிரியர் மாணவியின் கால்களைத் தொட்டதை குறைந்தது இருவர் பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில், அந்த மாணவி தனது ஆசிரியருக்குப் பிறந்தநாள் பரிசாக மிட்டாய் ஜாடி ஒன்றை வழங்கியுள்ளார். மேலும் ஒரு சந்தர்ப்பத்தில், அவரிடம் காதல் கடிதங்களைக் கொடுத்துள்ளார். அந்த நிலைக் கடிதங்களை பின்னர் ஆசிரியரின் மனைவி கண்டுபிடித்துள்ளார்.
"பிரதிவாதியின் காரின் கையுறைப் பெட்டியில் (Glove box) கையால் எழுதப்பட்ட கடிதங்களை அவரது மனைவி கண்டுபிடித்தார்" என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பிரதிவாதி அந்த கடிதங்களை மனைவியிடமிருந்து வாங்கி கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார்", பின்னர் மனைவியின் தொலைபேசியிலிருந்து அவருக்குத் தெரியாமலும் அனுமதியின்றியும் அந்த கடிதங்களின் புகைப்படங்களை அழித்துள்ளார்.
விசாரணையாளரால் கைப்பற்றப்பட்ட சில செய்திகளில், ஆசிரியரின் முன்னாள் மனைவி தனது திருமண மோதிரங்களைக் கழற்றி எறிந்தது பற்றிய உரையாடலும் அடங்கும்.
"உங்களுக்கு சிறிது வேதனையாக இருக்கிறதா? அதாவது இது மிகவும் உண்மையானதாக உணர்கிறதா? இருவருக்கும் இடையே நடப்பது உண்மைதானா?" என்று மாணவி தனது முன்னாள் ஆசிரியரிடம் கேட்டுள்ளார்.
"இல்லை, உண்மையில் எனக்கு வேதனை எதுவும் இல்லை. ஆம், இது மிகவும் உண்மையானதாக உணர்கிறது, ஆனால் அதை எதிர்பார்த்ததுதானே," என்று ஆசிரியர் பதிலளித்துள்ளார்.
ஆசிரியர் முதன்முதலில் ஏப்ரல் 2020 இல் இடைநிறுக்கம் செய்யப்பட்டார். குறைந்தது 15 சந்தர்ப்பங்களில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு கற்பிக்க காலவரையறையின்றி தடை விதிக்க வேண்டும் என 2024 இல் குயின்ஸ்லாந்து ஆசிரியர்கள் கல்லூரி விண்ணப்பித்தது.
மாணவி பாடசாலையில் இருந்தபோதே இருவரும் முத்தமிட்டுக் கொண்டதாகவும், இதர பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
விசாரணையின் போது, ஆசிரியரும் மாணவியும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். மேலும், "மாணவியின் தோழியிடமிருந்து பெறப்பட்ட இரண்டாம் கட்டக் கேள்விப்பட்ட தகவல்கள் மட்டுமே சான்றாக இருந்ததால்" சில குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை.
இன்று தீர்ப்பளித்த தீர்ப்பாயம், காலவரையற்ற தடை பொருத்தமானதாக இருக்காது என்றும், ஆசிரியர் முதன்முதலில் இடைநிறுத்தப்பட்ட நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்கு அவர் மீண்டும் பதிவு செய்ய விண்ணப்பிப்பதற்கும் கற்பிப்பதற்கும் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்தது.
இதன்படி, அவர் இந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி முதல் மீண்டும் கற்பிக்கத் தகுதி பெறுவார்.
இன்றைய தீர்ப்பில், குயின்ஸ்லாந்து ஆசிரியர்கள் கல்லூரி, தீர்ப்பாயத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டு, "மாணவர்களின் நலனுக்காகச் செயல்படவும், அவர்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் பெற்றோராலும் சமூகத்தாலும் ஆசிரியர்கள் மீது விசேட நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
"மேலும், அந்த நம்பிக்கையுடன், அது மீறப்படாது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது" என்று அது கூறியது.