பேர்த் நகருக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் உள்ள சிறிய நகரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள், ஒட்டுமொத்த நாட்டிற்குமே ஒரு முக்கிய செய்தியை உணர்த்தியுள்ளதாக வன் நேஷன் (One Nation) கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சீக்ரெட் ஹார்பர் (Secret Harbour) இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 74 சதவீதம் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில், வன் நேஷன் கட்சியின் லூக் ஹெர்டேகன் (Luke Herdegen) 39.08 சதவீத முதன்மை வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக தொழிற்கட்சியின் (Labor) ஜார்ஜியா ட்ரீ (Georgia Tree) 24.43 சதவீத வாக்குகளையும், லிபரல் கட்சியின் வேட்பாளர் ரியான் ராபர்ட்சன் (Ryan Robertson) 17.29 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம், மேற்கு ஆஸ்திரேலிய (WA) கீழவைகளில் நுழைந்த வன் நேஷன் கட்சியின் முதல் உறுப்பினர் என்ற பெருமையை ஹெர்டேகன் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இத்தொகுதி 11 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தொழிற்கட்சியின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் முடிவு, மேற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ரோஜர் குக் (Roger Cook) மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) ஆகியோரின் ஆட்சிக்கான தெளிவான தீர்ப்பு என்று ஹெர்டேகன் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமையன்று, மாநில வன் நேஷன் கட்சித் தலைவர் ராட் கேடிஸ் உடன் இணைந்து, பதவி விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் பால் பாப்பாலியாவின் தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெர்டேகன், "மக்கள் சலிப்படைந்து விட்டார்கள்; அவர்கள் சோர்வடைந்துள்ளனர். தெற்கு வெளிப்புற புறநகர்ப் பகுதிகளில் த புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்," என்று தெரிவித்தார்.
மேலும், "இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்கட்சி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தது. தங்களின் அதிருப்தியை கான்பெராவிற்கும் (Canberra), அந்தோனி அல்பானீஸிற்கும் வாக்காளர்கள் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேர்த் நகரின் வெளிப்புற புறநகர்ப் பகுதிகளில் உள்ள மேலும் பல தொகுதிகளைக் கைப்பற்ற கட்சி திட்டமிட்டு வருவதாக ஹெர்டேகன் தெரிவித்தார். பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாகத் திகழும் இந்தப் பகுதிகள், தற்போதைய வாழ்வாதாரச் செலவினப் பிரச்சனைக்கு (cost of living crisis) மத்தியில் ஒன் நேஷன் கட்சியின் 'ஆரஞ்சு அலையால்' மாற்றத்தைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளன.
பிரதமரின் சொந்த தொகுதியான 'ரொக்கிங்ஹாம்' (Rockingham) தொகுதி உட்பட குவினானா (Kwinana), பால்டிவிஸ் (Baldivis) ஆகிய தொகுதிகள் அனைத்தும் தற்போது ஒன் நேஷன் கட்சியின் கவனப் புள்ளிகளாக மாறியுள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்த வெற்றி, பிரதமர் ரோஜர் குக்கிற்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும் என்று கூறிய கேடிஸ், இது ஆளும் கட்சிக்குள் தலைவரை மாற்றுவதற்கான உட்கட்சிப் பூசலைத் (leadership spill) தூண்டக்கூடும் என்றும் கணித்துள்ளார்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது தோல்வியை ஒப்புக்கொண்ட தொழிற்கட்சி வேட்பாளர் ஜார்ஜியா ட்ரீ, "எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்றாலும், நமது சாதனைகள் குறித்து பெருமையடைகிறேன்," என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இத்தேர்தல் முடிவுகளின்படி, ஹெர்டேகன் 7.04 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இது முந்தைய தேர்தலை விட 18 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு மாற்றத்தைக் (swing) காட்டுகிறது.
வெற்றி குறித்து ஒன் நேஷன் கட்சியின் தேசியத் தலைவர் பாலின் ஹான்சனுடன் (Pauline Hanson) தொலைபேசியில் உரையாடியதாக ஹெர்டேகன் உறுதிப்படுத்தினார். இந்த மகத்தான வெற்றிக்காக ஹெர்டேகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஹான்சன், "சீக்ரெட் ஹார்பர் தேர்தல் முடிவு தொழிற்கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணி. உங்களது மற்ற தொகுதிகளையும் நோக்கி நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்," என எச்சரித்துள்ளார்.
நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பால் பாப்பாலியாவின் ஓய்வைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. எனினும், இந்தத் தோல்வி விக்டோரியா மற்றும் பேர்த் மாநில அளவிலான உள்ளூர் பிரச்சினைகளால் மட்டுமே ஏற்பட்டது என்றும், இது மத்திய அரசுக்கான தீர்ப்பு அல்ல என்றும் மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.