சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, குழந்தையின் தாயின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொலிஸார் தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆபர்ன் (Auburn) பகுதியில் உள்ள ஹாரோ வீதியில் (Harrow Road) இன்று முற்பகல் 11.20 மணியளவில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவசர சேவையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவம் நடந்த பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பொலிஸார், குழந்தை எவ்வாறு உயிரிழந்தது என்பது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குழந்தையின் தாயின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் அத்தாயைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை பொலிஸார் திங்கள்கிழமை பிற்பகலில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.