சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சிட்னியின் முக்கிய மையப்பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை சிறுவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், மேற்கு சிட்னியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கூட்டாட்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது அச்சிறுவனுக்கு 14 வயது.
அவரது கணினியில் தீவிரவாதக் கருத்துக்கள் அடங்கிய 40-க்கும் மேற்பட்ட காணொளிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெயர் வெளியிடப்படாத அச்சிறுவன், செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற தண்டனை விவரங்கள் மீதான விசாரணையின் போது, பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தயாரானதற்கான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இஸ்லாமிய தீவிரவாத எண்ணத்தால் உந்தப்பட்டு, வெடிபொருள்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதற்காக, தாக்குதலுக்கான இடங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து அச்சிறுவன் இணையத்தில் தீவிரமாக ஆராய்ந்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வாக்குமூலமளித்த அச்சிறுவன், 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டிக்டாக் (TikTok) தளத்தின் மூலம் தீவிரவாதக் உள்ளடக்கங்களை முதன்முதலில் பார்த்ததாகவும், அது தனக்கு "மிகவும் சுவாரஸ்யமாக" இருந்ததாகவும் கூறினார்.
அதன்பின்னர், பல்வேறு இணையதளங்களில் அவன் பார்த்த பதிவுகள் தீவிரமானதாகவும் வன்முறை நிறைந்ததாகவும் மாறின. தொடர்ந்து, தனது தீவிரவாதக் கருத்துக்கள் குறித்து மற்றவர்களுடன் இணையவழியில் தொடர்புகொண்டு பேசத் தொடங்கியுள்ளான். தனது கருத்துக்களால் "மற்றவர்களைக் கவர முயற்சிப்பதற்காக" அத்தகவல்களைப் பகிர்ந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
தீவிரவாதப் பாதையில் விலகிச் சென்ற சிறுவன்
சிட்னி ஒப்பேரா ஹவுஸ் (Sydney Opera House) மற்றும் சிட்னி மாரத்தான் போட்டிகள் நடைபெறும் இடங்கள் உட்பட, தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியமுள்ள இடங்கள் குறித்து இணையத்தில் உள்ளவர்களுடன் அச்சிறுவன் விவாதித்துள்ளார். குறிப்பாக, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பாஸ்டன் மாரத்தான் வெடிபயங்கரவாதச் சம்பவத்தைப் போல் தாக்குதல் நடத்த அவன் ஆர்வம் காட்டியுள்ளார்.
இருப்பினும், வெடிகுண்டு தயாரிப்பதற்கோ அல்லது தாக்குதலை நடத்துவதற்கோ தேவையான எந்தவொரு பொருட்களையும் வாங்குவதற்கான நடவடிக்கைகளில் அச்சிறுவன் ஈடுபடவில்லை என்பதும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்தும் எண்ணம் இருந்ததா என்று கேட்கப்பட்டதற்கு, கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை அதுகுறித்து "யோசித்துக்கொண்டிருந்ததாகவும்", 50/50 என்ற அளவிலேயே மனநிலையில் இருந்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
தற்போது தான் "தீவிரவாத எண்ணங்களிலிருந்து மீண்டுள்ளதாகவும்", ஐ.எஸ் (ISIS) அமைப்பு "மிகவும் கொடூரமானது" என நம்புவதாகவும் அவன் கூறினான். இன்னமும் இஸ்லாமிய தீவிரவாதக் கருத்துக்களில் நம்பிக்கையுள்ளதா என்ற கேள்விக்கு "இல்லை" என்று பதிலளித்த அவன், தனது செயல்களுக்காக ஆழமான வருத்தம் தெரிவிப்பதாக நீதிபதியிடம் கூறினார்.
கைது செய்யப்பட்ட பிறகு சில காலம் காவலில் வைக்கப்பட்டிருந்த அச்சிறுவன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு பெற்றாருடன் வீட்டில் வசித்து வருகிறான். தற்போது வீட்டிலேயே அவனுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
சிறுவனின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தீவிரவாதச் சிந்தனை என்ற சுழலுக்குள் சிக்கிய இந்த இளைஞன், தற்போது தனது தவறுகளை உணர்ந்துவிட்டான்" என்று வாதிட்டார். அவனுக்கு மத ரீதியிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பிணையில் இருக்கும் அச்சிறுவனுக்கான தண்டனை விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளன.