பிரிஸ்பேன் பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து தீங்கிழைக்கும் (Deepfake படங்களை உருவாக்கிய நபர், பாதிக்கப்பட்டவர்கள் மீது எவ்வித "இரக்கமும் அற்றவர்" என நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட போதிலும், அவருக்கு கூடுதல் சிறைத்தண்டனை தவிர்க்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில், 56 வயதான அந்தோனியோ ரொடோண்டோ (Antonio Rotondo) மீது சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளும் உறுதிசெய்யப்பட்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதில் 5 ஆபாசப் படங்களைப் பகிர்ந்த குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
மேலும், குழந்தைகள் ஆபாசப் பொருட்களை விநியோகித்தமை தொடர்பான ஒரு குற்றச்சாட்டும், 11 பின் தொடர் உருட்டல் (Stalking) குற்றச்சாட்டுகளும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டில், பிரிஸ்பேனிலுள்ள தனியார் பாடசாலை ஒன்றின் தற்போதைய மற்றும் முன்னாள் மாணவிகள், ஊழியர்கள் உட்படப் பல பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை பொது இணையதளங்களில் இருந்து எடுத்து, அவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியளவோ ஆபாசமாகத் தோன்றும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ரொடோண்டோ மாற்றியமைத்துள்ளார்.
அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட படங்களை அப்பாடசாலையின் நிர்வாக மின்னஞ்சல் முகவரிக்கும் மேலும் பலருக்கும் அவர் அனுப்பியுள்ளார். பிரிஸ்பேன் ஃபேஷன் வீக் (Brisbane Fashion Week) நிகழ்வில் பங்கேற்ற பெண்களின் புகைப்படங்களையும் அவர் இதேபோன்று தவறாகப் பயன்படுத்தியுள்ளதுடன், அவற்றில் சில டீப்ஃபேக் படங்களை அவர் கட்டுப்படுத்திய இணையதளத்திலும் பதிவேற்றியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 7 தாக்க அறிக்கைகளில் (Victim Impact Statements), இந்தச் செயல் தங்களை "மிகவும் அவமதிக்கும் வகையில்" மற்றும் "கேவலப்படுத்தும் வகையில்" அமைந்ததாகப் பெண்கள் சிலர் விவரித்துள்ளனர்.
அதில் ஒரு பெண், தான் "அவமானமாகவும் துரோகமிழைக்கப்பட்டது போலவும்" உணர்ந்ததாகக் கூறியதுடன், "இதற்கு தொழில்நுட்பத்தைக் குறை கூற முடியாது, அதை பயன்படுத்துபவர்களே காரணம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பெண், தனது உருவத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும், "அவமானப்படுத்தப்பட்டு, சுயமரியாதையையும் தனது புகைப்படத்தின் மீதான கட்டுப்பாட்டையும் இழந்ததாக" உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெண், "இது போன்ற கொடுமை பிறருக்கும் நடந்துள்ளது என்பதை அறியும்போது நெஞ்சம் பதறுகிறது, நாங்கள் இதற்கெல்லாம் தகுதியானவர்கள் அல்ல" எனக் கூறியுள்ளார்.
இத்தாக்குதலுக்கு இலக்கான 13 வயதுச் சிறுமியின் தாய் கூறுகையில், "இந்த ரகசியத்தை" தனது மகளிடம் இருந்து தற்போதைக்கு மறைத்து வைத்திருக்கும் சுமையைச் சுமப்பதாகவும், எதிர்காலத்தில் ஒருநாள் அவளிடம் இதைச் சொல்லும்போது அவள் சந்திக்கும் அதிர்ச்சியை எண்ணி அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இன்றி தானே வாதிட்ட ரொடோண்டோ, தன் மீது 17 குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக்கூடாது எனச் சுருக்கமாக வாதிட்டார். தான் வெளிநாட்டில் வசித்தபோது இரண்டு மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்பியதாகவும், பாதிக்கப்பட்ட சிலர் இந்த வழக்கு விசாரணை வரை அந்தப் படங்களைப் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
"அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சாட்சிகளுக்கு அந்தப் படங்களைக் காண்பித்ததன் மூலமே நீதிமன்றத்திற்குள் அந்தக் குற்றத்தைப் பூர்த்தி செய்தனர்" என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், தான் மின்னஞ்சல் அனுப்பிய இரு நபர்களே சாட்சிகளுக்கு இந்த விவகாரத்தைத் தெரியப்படுத்தி நிலைமையை தீவிரமாக்கியதாக அவர் பழியைச் சுமத்தினார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் பென் ஜாக்சன் வாதிடுகையில், ரொடோண்டோ தனது தவறுக்கு எந்தவொரு வருத்தமும் தெரிவிக்காததால், அவர் திருந்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். "தான் செய்த செயலின் தீவிரத்தையோ அல்லது அதனால் ஏற்பட்ட பாதிப்பையோ அவர் உணர்ந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரொடோண்டோ தான் செய்த செயலின் தீவிரத்தைப் பற்றி "எந்தவொரு புரிதலும் இன்றி" இருக்கிறார் என்பதை நீதிபதி ஜான் ஆலன் (Judge John Allen) ஒப்புக்கொண்டார். ரொடோண்டோவின் இந்தச் செயலால் அந்தப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்பட்ட விளைவுகள் "மிகவும் ஆழமானவை மற்றும் நீண்டகாலம் நீடிக்கக்கூடியவை" என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
ரொடோண்டோவிற்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே அந்த தண்டனைக் காலத்தைச் சிறையில் கழித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு உடனடி பிணை (Parole) வழங்கப்பட்ட போதிலும், பிற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்படுவார்.
தலைப்புகள் சில