லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி இன்று ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ட்ரோன் ஒன்று சிசேரியாவில் உள்ள கட்டிடம் ஒன்றை சேதப்படுத்தி உள்ளது, ஆனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர், சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை பின்னர் உறுதி செய்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தாக்குதலின் போது நெதன்யாகு வீட்டில் இல்லை என்றும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே மேலும் இரண்டு ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், வடக்கு டெல் அவிவில் உள்ள கிலிலோடில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.