மெல்போர்ன் உணவகம் ஒன்றுக்கு வெளியே, பாதாள உலகப் புள்ளியான கவின் "கேப்பபிள்" ப்ரெஸ்டன் (Gavin "Capable" Preston) பகல் பொழுதில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், இரு நபர்களுக்கு தலா 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 செப்டம்பர் 9 அன்று, கீலார் (Keilor) பகுதியில் உள்ள 'ஸ்வீட் லூலூஸ்' (Sweet Lulu's) உணவகத்தில் 50 வயதான ப்ரெஸ்டன் காலை உணவுக்காகக் காத்திருந்தபோது, திருடப்பட்ட காரில் வந்த ஜேடன் டிட்டோ (Jaeden Tito - 25), ரபி ஜஹாபே (Rabii Zahabe - 26) ஆகிய இரு கொலையாளிகளும் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
திடீரெனப் பாய்ந்த தோட்டாக்களைக் கண்டு உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
ப்ரெஸ்டனைக் கொலை செய்த குற்றம் மற்றும் தாக்குதலின் போது சுடப்பட்ட அவரது நண்பரான ஏ.ஜே. மேக்னியைக் (AJ Maghnie) கொலை செய்ய முயன்ற குற்றம் ஆகியவற்றை இவ்விருவரும் புரிந்தது மே மாதத்தில் நடைபெற்ற நடுவர் மன்ற (Jury) விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
ப்ரெஸ்டனின் அடையாளம் தெரியாத எதிரி ஒருவரால், டிட்டோ மற்றும் ஜஹாபே ஆகிய இருவரும் கூலிப்படை கொலையாளிகளாக அமர்த்தப்பட்டதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வதிட்டமிட்டனர்.
சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் கொலைச் சம்பவத்தை யார் ஏவிவிட்டது என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. தாக்குதலுக்குப் பிறகு இருவரும் சிட்னியை நோக்கி ஹியூம் நெடுஞ்சாலையில் (Hume Freeway) பயணித்தபோது, அவர்களில் ஒருவர் "நாம் இப்போது சகோதரர்கள் ஆகிவிட்டோம்" என்று கூறியது தெரியவந்துள்ளது.
மேலும், ஜஹாபே இணையத்தில் "நாடுகடத்தல் ஒப்பந்தம் இல்லாத நாடுகள்" (no extradition countries) குறித்தும், தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கோரும் பிரார்த்தனைகள் குறித்தும் தேடியுள்ளார்.
நீதிபதி மைக்கேல் ஓ'கானெல் (Justice Michael O'Connell) தீர்ப்பளிக்கும் போது, இந்தத் துப்பாக்கிச் சூடு "மிகவும் திட்டமிட்டு" நடத்தப்பட்டது என்றும், "மனித உயிரின் மதிப்பை சிறிதும் பொருட்படுத்தாத கொடூரமான செயலாகும்" என்றும் குறிப்பிட்டார்.
பொதுவெளியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் ஒரு "முக்கியமான தீவிரக் குற்றம்" என்றும், அச்சத்தில் அலறியடித்து ஒளிந்துகொண்ட சாட்சிகளுக்கு இது "மிகவும் அதிர்ச்சியளிக்கும் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் சம்பவமாக" இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
குற்றத்தின் தீவிரம், முன்கூட்டியே திட்டமிட்டமை, பண ஆசை மற்றும் அவர்களின் குற்றத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வழக்கமான 25 ஆண்டுகாலத் தண்டனையை விட அதிகமாக, இருவருக்கும் தலா 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நியூ சவுத் வேல்ஸிலிருந்து பயணித்தே இவர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இருவருக்கும் பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்குமாறு வாதிட்டபோதிலும், டிட்டோவுக்கு 26 ஆண்டுகளும், ஜஹாபேக்கு 27 ஆண்டுகளும் பிணையில் வர முடியாத குறைந்தபட்ச சிறைக்காலமாக (non-parole period) நிர்ணயிக்கப்பட்டது.
அவர்களது சொந்த பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பிற்காக சிறையில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் அவர்களின் தண்டனையைக் குறைக்க ஓரளவு காரணமாக அமைந்ததாகக் கூறிய நீதிபதி ஓ'கானெல், குற்றவாளிகள் இருவருமே தங்களது தவறுக்காக எந்தவொரு மனவருத்தமும் தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அவர்கள் இருவரும் தீவிர வன்முறைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நியூசிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த டிட்டோ, தற்போது தனது சொந்த நாட்டிற்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளார்.
தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, ஜஹாபே தனது கோட்டைச் சரிசெய்தவாறு, சில நேரங்களில் கண்களை மூடிக்கொண்டிருந்தார். அதேநேரம் டிட்டோ நீதிமன்ற அறையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது, பார்வையாளர் பகுதியிலிருந்து உரத்த கூச்சல்கள் கேட்டன.