பாலியல் வன்முறை மற்றும் குடும்பச் சட்ட நீதி அமைப்புகளில் ஆஸ்திரேலியர்கள் இன்னமும் "ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான பாதிப்புகளை" எதிர்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைத் தடுப்பு ஆணையர் மைக்கேலா க்ரோனின் (Micaela Cronin) தனது மூன்றாவது ஆண்டறிக்கையைப் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கங்களும் சமூகங்களும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தேவையான வேகத்திலோ அல்லது அளவிலோ இன்னும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் தரவுகள் பதிவு செய்யப்படத் தொடங்கிய கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பாலியல் வன்முறைகள் உச்சத்தை எட்டியுள்ள நிலையிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இரு முக்கியப் பகுதிகளாகப் பாலியல் வன்முறை மற்றும் குடும்பச் சட்ட நீதி அமைப்புகளை இந்த ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. "ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த, அதன் அளவுக்கு ஏற்றவாறு தொடர்ச்சியான தேசிய அளவிலான முதலீடும் நடவடிக்கைகளும் அவசியமாகிறது" என்று க்ரோனின் தெரிவித்தார்.
"இத்தகைய நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கப்பட்டு, அவர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டு, அவர்களின் நீதி மற்றும் குணமடையும் பயணத்தில் உரிய ஆதரவு வழங்கப்படும் என்பதையும் நாம் அனைவரும் இணைந்து தெளிவுபடுத்த வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட பாலியல் தாக்குதல்களில் பத்தில் ஆறு சம்பவங்கள், குடும்பம் அல்லது நெருங்கிய உறவுகளுக்கு வெளியே நடைபெற்றவை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இது வெறும் குடும்ப வன்முறையின் நீட்சி மட்டுமல்ல, "தனித்துவமான ஒரு தேசியப் பிரச்சனை" என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதேவேளையில், குடும்பச் சட்ட அமைப்பும் "தொடர்ச்சியான அச்சுறுத்தலாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் தளமாகவும்" இருந்து வருகிறது.
பாலியல் வன்முறைகள் குறித்த நிறுவனங்களின் பதிலளிப்பு தொடர்பான தீவிர அரசியல் மற்றும் பொது விவாதங்கள், இளைஞர்களைப் பாதிக்கும் பெண்கள் மீதான வெறுப்பு சார்ந்த கருத்துக்கள் (misogynistic content) ஆகியவை, இவற்றுக்குத் தற்காலிகக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாகத் தொடர்ச்சியான தேசியக் கவனத்தைச் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துவதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாலியல் வன்முறைகளுக்கு முதன்மை முன்னுரிமை அளித்துத் தீர்வுகாண தேசிய அமைச்சரவையில் அரசியல் தலைவர்கள் அளித்துள்ள உறுதிப்பாட்டை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை 2032-க்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேசியத் திட்டத்திற்கு உதவும் வகையில் 8 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் டாண்யா பிளிபர்செக் (Tanya Plibersek), பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த அமைப்புகளை முழுமையாக நம்பும் வகையில், குடும்ப நீதிமன்றங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பில் கூட்டாட்சி அரசு ஏற்கனவே மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களைச் சுட்டிக்காட்டுவார்.
"நாம் இதற்கு முன்பும் இந்த நாட்டை மாற்றியமைத்துள்ளோம். இப்போது மீண்டும் இணைந்து அதை மாற்ற வேண்டிய நேரம் இது," என்று அவர் குறிப்பிடுவார்.
"இந்த வன்முறையால் உயிர்களை இழந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நாம் வெறுமனே அதிர்ச்சியை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது; அவர்களுக்காக நாம் உடனடியாகச் செயல்படக் கடமைப்பட்டுள்ளோம்."