சமூக ஊடகங்களின் அல்காரிதம்களைக் (algorithms) கட்டுப்படுத்துவதற்கான கன்பராவின் திட்டங்களை டிரம்ப் விமர்சித்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான தங்களது உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
சமூக ஊடகப் பயனாளர்கள் அல்காரிதம் பரிந்துரைகளில் இருந்து விலகிக் கொள்ளும் (opt out) வாய்ப்பை வழங்கும் வரைவுச் சட்டத்தை ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதன் மூலம் பயனாளர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களைச் சுயமாக நிர்வகித்துக் கொள்ள முடியும்.
இந்தச் சட்டத்திற்குப் பணியாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 109.2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (79 மில்லியன் அமெரிக்க டாலர்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,
"அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்பத் துறையின் மீது டிஜிட்டல் சேவை வரிகள், அபராதங்கள் மற்றும் இதர வடிவிலான சுரண்டல்களைச் சுமத்துவதற்கு எதிராக வர்த்தகக் கூட்டாளிகளைத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்" என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் குஷ் தேசாய் கூறியதாக ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவியூ புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், "தங்களது வர்த்தகக் கூட்டாளிகளிடம் இந்தப் பிரச்சினைகளை எழுப்புவதில் டிரம்ப் நிர்வாகம் உறுதியாக உள்ளது" என்றும் தேசாய் கூறினார்.
இந்த முன்மொழியப்பட்ட சட்டம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் இதுவரை தனது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவில்லை என்று ஆஸ்திரேலியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அணிக்கா வெல்ஸ் தெரிவித்தார்.
மேலும், தங்களது அரசின் சமூக ஊடகச் சீர்திருத்தங்கள் "சுரண்டல்" என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.
ஆஸ்திரேலியாவின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டே தனது அரசு கொள்கைகளை முடிவெடுக்கிறது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
டிரம்புடனான தமது உறவு "மிகவும் நன்றாக" இருப்பதாக வலியுறுத்திய அவர், இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது இரு தலைவர்களும் சந்திக்கவுள்ளதாகவும் கூறினார்.