அடிலெய்டின் வடக்குப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட போக்குவரத்துச் சோதனையின் போது, நாஜி முறையில் வணக்கம்(Nazi salute) செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சாரதிக்கு எதிராக, போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை செலுத்தியமை தொடர்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்மித் பீல்டில் உள்ள பிரதான வடக்கு வீதியில் பொலிஸாரின் வாகனத்திற்கு பின்னால், 18 வயதுடைய குறித்த இளைஞர் தனது வாகனத்தை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகச் செலுத்தியதையடுத்து, செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் மறிக்கப்பட்டார்.
டேவோரன் பார்க் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனின் ரொயோட்டா காரை பிற்பகல் 5 மணியளவில் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திய பொலிஸார், அவருக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த சாரதி கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாஜி பாணியில் வணக்கம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள அந்த இளைஞரின் சாரதி அனுமதிப்பத்திரமும் உடனடியாகச் செயற்படும் வகையில் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
“தடயவியல் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னர்” போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தைச் செலுத்தியமைக்கான மேலதிக குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்ளக்கூடும் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் எலிசபெத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் 2024 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.