தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலியக் கடல் சிங்கம் (Sea lion) ஒன்றிற்கு முதன்முறையாக 'எச்5' (H5) பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் எமிலி போர்க் தெரிவித்துள்ளார்.
கெங்கரூ தீவில் உள்ள 'சீல் பே' (Seal Bay) பகுதியில் இந்த உறைவிடக் கடல் சிங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியக் கடல் சிங்கங்களின் மொத்த தொகையே 10,000-க்கும் குறைவாகவே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 85 சதவீதம் தெற்கு ஆஸ்திரேலியாவிலும், எஞ்சிய 15 சதவீதம் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் வாழ்கின்றன.
கடந்த மாதம், தெற்கு ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நீண்ட மூக்கு சீல் (Long-nosed fur seal) ஒன்றிற்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கு ஒன்றிற்கு பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பம் அதுவென்பது குறிப்பிடத்தக்கது.