இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் உள்ள வீடு ஒன்றில் ஆஸ்திரேலிய ஆடவர் மற்றும் அவரது இரு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அம்மாநிலக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்டா பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் 56 வயதான டேமியன் ஜான் ஷா (Damien John Shaw) மற்றும் அவரது 6 வயது மகன், 4 வயது மகள் ஆகியோரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டதாகப் படாங் ரீஜென்சி (Badung Regency) காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது ஜகார்த்தாவில் இருக்கும் அவரது மனைவி, கணவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது குழந்தை அழுவது கேட்டுள்ளது. அடுத்த சில நொடிகளில் அழைப்பு துண்டிக்கப்பட்டு, கணவரை மீண்டும் தொடர்புகொள்ள முடியாததால், அவர் அண்டை வீட்டாரை அழைத்து விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அண்டை வீட்டார் மற்றும் அப்பகுதியின் சமூகத் தலைவர் இணைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தைகள் மற்றும் கணவர் சடலமாகப் கிடந்தது தெரியவந்தது.
மூவரின் உடல்களும் டென்பசார் (Denpasar) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியக் காவல்துறையினர் அங்கு உடற்கூறாய்வு நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாலியில் உயிரிழந்த மூன்று ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்துத் தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்தத் துயரமான நேரத்தில் அக்குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக மேற்கொண்டு எந்தக் கருத்தும் தெரிவிக்க இயலாது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.